ஈராக்கில் குண்டு வீச்சில் பலியான 2 தமிழர்களின் உடல் நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது!
திங்கள், 12 மே 2008 (09:15 IST)
ஈராக்கில் தீவிரவாதிகளின் குண்டுவீச்சுக்கு பலியான 2 தமிழர்களின் உடல் நாளை (13ஆம் தேதி) சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஈராக்கில் கடந்த 8ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில், நாகப்பட்டினம் அருகேயுள்ள கீழேசனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் பலியாயினர். இருவரும் அங்குள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
பலியான நிகழ்வு குறித்து சக ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் தகவல் கொடுத்தனர். இறந்துபோன ரமேஷ் குமாரின் தந்தை சாமியப்பன் தனது மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டி.எஸ்.ஜவகரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டது.
இந்த நிலையில், நேற்று முதலமைச்சர் செயலக அதிகாரிகள் இறந்துபோன இருவரின் வீடுகளுக்கும் சென்றனர். இருவரின் உடல்களும் நாளை (13ஆம் தேதி) சென்னை கொண்டுவர தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்திருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.