அழகிரி ஏற்பாடு: டெல்லியில் தவித்த தமிழர்கள் சென்னை திரும்பினர்

திங்கள், 1 ஜூன் 2009 (12:42 IST)
வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று, டெல்லியில் தவித்த சுற்றுலாப் பயணிகள், மு.க.அழகிரியின் ஏற்பாட்டின் பேரில் ரயில் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

வண்ணாரப்பேட்டை பெஸ்ட் பிரண்ட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் கோடை சுற்றுலா ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு 140 பேர் சுற்றுலா சென்றனர். இதற்காக ரயில் மற்றும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

கடந்த 20ம் தேதி ரயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற இக்குழுவினர் ஆக்ரா, ஹரித்துவார் மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, கடந்த 29ம் தேதி டெல்லி வந்தனர். டெல்லியில் இருந்து சென்னை வர, மாலை 6.45 மணிக்கு புறப்படும் ஜி.டி.ரயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், காஷ்மீரில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்ததால், சுற்றுலா பயணிகளால் சென்னை வரும் ரயிலை பிடிக்க முடியவில்லை.

இதனால், டெல்லி விமானம் வந்து தவித்துக் கொண்டிருந்த அவர்கள், டெல்லி வந்த மு.க.அழகிரியை சந்தித்து தங்களது நிலையை விளக்கினர்.

இதையடுத்து, டெல்லியில் உளள் தமிழ்நாடு இல்லத்தில் அவர்களை தங்கவைத்த அழகிரி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, தமிழர்களை சென்னைக்கு அனுப்பிவைக்க ஓர் தனிப்பெட்டி ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிபெட்டி இணைக்கப்பட்டு, தமிழக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சென்னை புறப்பட்டனர்.

இன்று காலை 7.45 மணிக்கு சென்னை வந்து சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அவரது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாதுகாப்பாக சென்னை வந்த அனைவரும் மு.க.அழகிரிக்கு நன்றி தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்