கூடங்குளம் போராட்டக்குழு மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது

திங்கள், 31 மார்ச் 2014 (16:10 IST)
கூடங்குளம் போராட்டக்குழு மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
 
கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. 
 
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளைத் திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
“போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 349 வழக்குகளில் 248 வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2013ல் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக 3 பேர் மீதான வழக்கு உள்ளிட்ட 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது. இவ்வழக்குகளைத் திரும்ப பெற்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். 
 
இவ்வழக்குகள் அனைத்தும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மற்றும் கடல்வழி போராட்டம் தொடர்புடையவை ஆகும்” என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்