ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும் - நடிகை சோனா

வெள்ளி, 14 மார்ச் 2014 (09:38 IST)
ஆண்களுக்கு இணையாக, பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார்.
FILE

நாடாளுமன்ற தேர்தல் பற்றி நடிகை சோனா கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பமாகி விட்டது. பெண்களை பொருத்தவரை இந்த தேர்தல் முக்கியமான நேரத்தில் வருகிறது. இந்தியா, ஆணாதிக்கம் மிகுந்த நாடு. இங்கே பெண்கள் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிறைய நடைபெறுகின்றன.

டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம், சென்னை பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல்வாதிகள் இதுபற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு முடிவு எடுக்கவில்லை.

அரபு நாடுகளை போன்ற கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், இதுபோன்ற வன்கொடுமைகள் இங்கேயும் நடைபெறாது. அதற்கு ஆண்களுக்கு இணையாக, பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு எந்த கட்சி முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அந்த கட்சிக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக அரசியலுக்கு வந்து பெண்களுக்கு சேவை செய்வேன். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்கள் போக வேண்டும். 40 வயதுக்கு மேல் நான் அரசியலுக்கு வருவேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று சோனா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்