மனநோயாளிகளை கலவரப்படுத்தாமல் சிகிச்சைக்குட்படுத்த வேண்டும் என்று முந்தைய வாரத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
மனநோயாளிகளைக் கையாள்வதில் அவருடன் தொடர்புடையவர்கள் பிரத்யேக நடைமுறைகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
மனநோயாளிகள் அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப நடந்து கொள்வார்கள். சிலர் வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். சிலர் வீட்டிலிருக்கும் பொருட்களை உடைக்கலாம்.
அதற்காக அவர்களை துன்புறுத்தும் செயல்களில் நாம் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பொருட்களை உடைக்கிறார்கள் என்பதால், ஒரு அறையில் வைத்துப் பூட்டுவதோ அல்லது சங்கிலியால் பிணைத்துக் கட்டுவதோ மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுபோன்ற செயல்களால் அவர்களின் நோய் தீவிரமடையக் கூடும்.
உரிய மருத்துவர்களின் அறிவுரையின் கீழ் அவர்களுக்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்தல் அவசியம்.
நரம்புத் தளர்ச்சி அல்லது நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது மனநோய் என்பதால், அவ்வப்போது மருத்துவர்களின் அறிவுரையின்படி ஊசி போடுவதோ அல்லது மாத்திரைகளை அளிப்பதோ சிறந்தது.
மனதளவில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய விஷயங்களில் ஈடுபடாமல் இருத்தல் சாலச் சிறந்தது.
உங்களுக்கு ஏற்றவாறு மனநோய் உள்ளவர்களை மாற்றக்கூடிய வகையில் அன்பு செலுத்துங்கள். நீங்கள் எது சொன்னாலும், அவர்கள் கேட்பது போல் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரச் செய்யுங்கள். அதன்பிறகு மருத்துவரை நீங்கள் தனியாகச் சந்தித்து நோயாளிகளின் நடவடிக்கைகளை எடுத்துக் கூறுங்கள். பின்னர் நோயாளிகளை வேறு சமயத்தில் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.
இதுபோன்ற தொடர் சிகிச்சை அளிப்பதால் மட்டும் 80 விழுக்காட்டிற்கு மேல் மன நோயைக் குணப்படுத்தி விடலாம்.
தவிர நோயாளிகளின் ஒத்துழைப்பும் மனோதத்துவ நிபுணர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை அவர்களுடன் தொடர்புடையவர்கள் மறந்து விடக்கூடாது.
எனவே மன நோயாளிகளைக் கையாள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு முக்கியமாக சமயோசிதம் வெகு அவசியம்.