மன நலத்தை பாதுகாப்போம்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (17:19 IST)
ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மன நல தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பால் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநோய் மற்றும் மூளை நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளின் மக்கள் அனைவரும் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை இந்த ஆண்டு மனநல தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உகந்த உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். மதுவோ, போதைப் பொருளோ மனக்கவலைக்கு ஏற்ற மருந்தாகாது. எனவே அவற்றைத் தவிருங்கள்.

உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பிறரிடம் பேசுங்கள். பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள்.

உங்களின் திறமை எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள். உடற்பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும்.

சென்னையில் திரைப்பட விழா: உலக மன நல தினத்தை (அக். 10) முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களுக்கு சென்னையில் சிறப்பு திரைப்பட விழா நடைபெறுகிறது.

ஏர்டெல் நிறுவனமும், மனச் சிதைவு நோயாளிகள் நல அமைப்பும் ("ஸ்கார்ஃப்') இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன. சென்னை அண்ணாசாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் மன நலம் தொடர்புடைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்கள் மூன்று திரைப்படங்கள் தினந்தோறும் திரையிடப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்