கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்றால்

கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்றால் என்ன, அதற்கும் நம் மனநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

நம்முடைய கஷ்ட காலங்களும், மனப்பிரச்சினைகளும் இந்த உலகத்தில் பிறந்து அடிபட்ட பின்னர்தானே ஏற்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் முக்கியமான மனப் பாதிப்பே பல காலம் கழித்து ஒரு வகை மன நோயாக பரிணாமம் பெறுகிறது என்று சொல்லிவிட்டு இப்போது கருவில் ஏற்படும் மன பாதிப்பு என்கிறீர்களே இது என்ன விஷயம் என்று கேட்கிறீர்கள் இல்லையா?

உண்மைதான். பிறந்த பின் ஏற்படும் மன பாதிப்பு ஒரு வகை, பிறப்பதற்கு முன் தாயிட்ன வயிற்றில் கருவாக இருக்கும்போதே ஏற்படும் மன பாதிப்பு மறுவகை!

பயம், படபடப்பு, பாதுகாப்பின்மை இவை மூன்றும் பெரும்பாலும் மனநோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய பயங்கள் எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் அவை உடனே வெளிவர வேண்டும் என்ற அவசியமில்லை. ஏதாவதொரு காலகட்டத்தில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென வெளிப்படுகின்றன.

ஆராயும்போதுதான் அந்த மன பாதிப்பு எந்த வயதில், எந்தக் காரணங்களால் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? எந்த சூழ்நிலையல் ஏற்பட்டது? என்று கண்டறிய முடிகிறது. இதைத்தான் சூழ்நிலை சிக்கல்களால் ஏற்படும் மன பாதிப்புகள் என்கிறோம். இந்த வகை மன பாதிப்புகள் எந்த வகை மருந்துகளுக்கும் கட்டப்படுவதேயில்லை.

கருவறையும் ஒரு கல்விக் கூடம்தான். அது குழந்தை பயிலும் முதல் பள்ளிக்கூடம்தான் எனலாம்.

ஆமாம் தாயிடமிருந்து குழந்தை உணவை மட்டுமா பெறுகிறது? உணர்வுகளையும் சேர்த்தே அல்லவா பெறுகிறது. தாயின் எண்ண அலைகள் அப்படியே குழந்தையை சென்று அடைகின்றன. கல்வியறிவும் சிறந்த கலைத்திறன்களும் கொண்ட தாய், கருவுற்ற காலத்தில் அந்த கல்வியிலும் கலைகளிலும் மனம் ஒன்றி ஈடுபடும்போது, அவற்றில் மெய் மறந்து லயிக்கும்போது - அந்த கல்வியும் கலைகளும், அறிவும் அப்படியே கருவிலிருக்கும் குழந்தையை சென்று அடைகின்றன. கருவிலிருக்கும் குழந்தையை ஐந்தாவது மாதத்திலேயே கேட்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் பெற்று விடுகிறது. தன்னைச் சுற்றி நடப்பவற்றை தாயின் மூலமாக அறிந்து கொள்கிறது. கருவறையில் அறியப்படும் கலைகள் கல்லறை வரை தொடருகின்றன.

கல்வியை மட்டுமல்ல தாயின் கவரைகளையும், கண்ணீரையும் கூட குழந்தை கவனிக்கிறது.

அது மனதின் மௌமான சோகம். அந்த சோகம் கருவை பாதிப்பது, கருவில் இருக்கும் குழந்தைக்கும் தெரியாது, தாய்க்கும் தெரியாது. இப்படி சோக ராகங்களை தினமும் குழந்தை கேட்க நேர்ந்தால்.. எனக்கு வாழ்வே, நிம்மதியே இல்லை, இதில் இந்த குழந்தை வேறு தேவையா" என்று தாய் மனமுடைந்து அழும்போது, அந்த சேயும் மனதளவில் பாதிக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பின்மை, பய உணர்ச்சி அந்த குழந்தையின் ஆழ் மனதில் கருவறையிலேயே ஆழமாக அழுத்தமாக எழுதப்பட்டு விடுகிறது.

பயமும் பாதுகாப்பின்மையும் தான் மனநோயின் அடித்தளம், இவ்வாறு கவலைகளுடன் கண்ணீருடன் தாய் போராடும்போது குழந்தை நாளொரு கவலையும் பொழுதொரு பயமுமாய் மெல்ல மெல்ல வளர்கிறது.

அது இந்த உலகத்திற்கு வருமுன்பே மனதால் அடிபட்டு, பயத்துடனேயே மனபாதிப்புடனேயே பிறக்கிறது. இந்தப் பயங்களை காலமும் அழிப்பதில்லை. அப்படி அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரிவதுமில்லை.

எத்தனையோ வருடங்கள் கழித்து இந்த பயங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனபாதிப்பாக வெளிப்படுகிறது.

கருவில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையா என்று எப்படி கண்டுபிடிப்பது?

1. இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாருடனும் ஒட்டாமல், கலகலப்பாக இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.

2. ஏதோ ஓர் இனம் தெரியாத பயம், எப்போதும் இவர்களிடம் காணப்படும்.

3. சிறு வயதிலேயே தாழ் மனப்பான்மை, மனச்சோர்வு இவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள். ஆனால் வெளியே தெரியாது.

4. சில குழந்தைகள் காரணமின்றி கோபப்படுதல், அளவுக்கு மீறிய வெறிச் செயல்களில் ஈடுபடுதல், வக்ரமான எண்ணங்கள் இவற்றால் பாதிக்கப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இளம் குற்றவாளிகளாக சீர்திருத்தப் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளில் பலர் இப்படி கருநிலையில் மனம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது.

5. இத்தகைய குழந்தைகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஒரு நேரம் இருக்கும் புத்தி, நடத்தை மறுநேரம் இருக்காது.

6. சிலர் படிப்பில் சிறந்து விளங்கினாலும் ஏதாவதொரு நடத்தை ஒவ்வொரு விதமாக மாறுபட்டு ஒரு வித்தியாசமான குழந்தையாக காணப்படும். ஆனால் இதை நாம் கவனிப்பதில்லை.

7. சுருக்கமாகச் சொன்னால் இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடத்தை ஒவ்வொரு விதமாக மாறுபட்டு ஒரு வித்தியாசமான குழந்தையாக காணப்படும். ஆனால், இதை நாம் கவனிப்பதில்லை.

இது குறித்து ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுபற்றிய ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.


ஹிப்னோதெரபி முறையில் கருநிலை மனபாதிப்பை ஆராய்தல

உள்மனம்தான், அந்த உள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள் தான் ஆழமாக அழுத்தமாக பதிந்து ஒருவரை மனநோயாளியாகவோ, செம்மையான மனம் கொண்டவராகவோ மாற்றுகிறது. உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுவதும் இனிக்கிறது.

இந்த உள்மனதை ஹிப்னோ முறையில் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடந்த காலத்தை நோக்கி செல்லுதல் முறையில், வயதை படிப்படியாக குறைத்து அவருடைய கருநிலை பருவத்திற்கு கொண்டு சென்று, அப்போது ஏற்பட்ட அனுபவங்களை ஆராய முடியும்.

செல்விக்கு வயது 18. 3 வயது முதலே நெஞ்சு வலி. படபடப்பு, பயம் என்று ஒரே பிரச்சினை இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து, எல்லாம் நார்மல் என்று வந்துவிட்டன. இதய வலிக்கு தரப்பட்ட மருந்துகள் தற்காலிகமாக அந்த வலியை நிறுத்தவே தவிர நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. செல்வியால் கடுமையாக எதையும் செய்ய முடியாது. தொடர்ந்து ஒரு 4 மணி நேரம் படிக்க முடியாது. ஞாபக மறதியும் வந்து வாட்டும். படித்தால் கண் நரம்புகள் இழுப்பது போல் இருக்கும். தலைபாரமாகிவிடும். ஆனால் உடலளவில் செல்விக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாக தெரிந்தது. இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனநல சிகிச்சைக்காக செல்வி இங்கே வந்தபோது மிகவும் டென்ஷனாக குழப்பத்துடன் இருந்தாள்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எப்படி உடல் நோயாக மாறும் என்று கேட்கத் தோன்றுகிறது இல்லையா? ஆமாம், மனம் பாதிக்கப்படும்போது உடலும் பாதிக்கப்படுகிறது. இதை "உளம் சார்ந்த உடல் நோய்கள்" (Pshcho Somatic Discorders) என்கிறோம். அதாவது மனவேதனை காரணமாக ஏற்படும் உடல் நோய்கள். "வியாதி உடலிலே - அதற்கான ஆணி வேர் மனதிலே" எனப்து போல செல்விக்கு மனப் பிரச்சனையும், உடல் பிரச்சனையும் சேர்ந்தே இருந்தது, வாட்டியது.

கருநிலை பருவத்தில் ஹிப்னோ ஆய்வில் செல்வி சொன்னது என்ன?

செல்வியின் வயது "ஹிப்னோ ரிக்ரஷன்" முறையில் படிப்படியாக குறைக்கப்பட்டு 1 வயது வரை ஆராய்ந்தும், எந்த தடயமும் கிடைக்காததால் கருநிலை பருவத்திற்கு செல்வி அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் அப்போது சொன்னது. . .

"கருவறை எனக்கு சிறை போல இருட்டாக இருந்தது. தினமும் நான் கேட்டதெல்லாம் அப்பாவின் ஏச்சுக்கள், அம்மாவின் அழுகை, துயரம் தாங்காமல் அம்மா அழுது அழுது அவளுக்கு நெஞ்சுவலியே வந்து விடும்".

எப்போது அப்பா வீட்டிற்கு வருவாரோ, என்ன செய்வாரோ என்ற திகில் அம்மாவிடம் எப்போதும் இருந்தது. "நம் குடும்பம் இருக்கும் லட்சணத்தில் இந்த குழந்தை தேவை தானா? இதை அழித்துவிடு என்று பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை என்று வெறித்தனமாக அம்மாவின் கழுத்தை நெறிக்க வந்தார். அம்மா வீறிட்டு அலறி, நெஞ்சுவலி வந்து கீழே விழுந்துவிட்டாள். அம்மாவை யாரும் கவனிக்கவில்லை. பயமும் திகிலும் அம்மாவை ஆட்டிப் படைத்தன. இந்த உணர்வுகள் எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. அம்மாவின் வலியும், வேதனையும் என்னைத் தாக்கின. எனக்கு இந்த உலகத்தில் பிறக்கவே பிடிக்கவில்லை."

"எப்போதும் இதே நினைவு என்னை வந்து இப்போதும் வாட்டுகிறது. இந்த துயர நினைவுகள் வரும்போது தலைபாரமும், நெஞ்சுவலியும், பயமும் ஏற்படுகின்றன. யாரைப் பார்த்தாலும் பயம், எங்கே சென்றாலும் பயம், அந்த பயம் அதிகமாகும் போது நெஞ்சுலி என்று பயமே வாழ்க்கையாகிவிட்டது. வாழ்க்கையில் பயங்கள் ஏற்படலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. எனக்குப் படிப்பு, திருமணம் எதுவும் வேண்டாம். என் அம்மாவைப் போல நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. . " என்று சொல்லி அழுத செல்வியை அமைதிப்படுத்தி தக்க சிகிச்சை தந்தபின் படிப்படியாக செல்வி குணமடைந்தாள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் விரைவில் தீர்வதில்லை. மிகவும் கடுமையான முயற்சியுடன் தான் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை. பொறுமையும், திறமையும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இத்தகைய "கருநிலை பருவத்தை ஹிப்னோ முறையில் ஆராய்ந்து குணப்படுத்துதல்" பற்றிய தகவல்கள் இந்தியாவில் அதிகமாக வெளியிடப்படவில்லை. ஆனால் மனோசக்தி இதழின் ஆசிரியர் திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய "முற்பிறவி மறுபிறவி அதிசயங்கள்" என்ற புத்தகத்தில் 23 வருடங்களுக்கு முன்பாகவே இதைப்பற்றி ஆராய்ந்து அழகாக விளக்கமாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கருவில் ஏற்படும் மன பாதிப்பைக் கூட குணப்படுத்தும் அரிய முறை ஹிப்னோதெரபி என்றால் மிகையாகாது.

லதாவுக்கு வயது நான்கு. எதற்குமே அழமாட்டாள். பசித்தாலும் அழவே மாட்டாள். பூச்சி கடித்தாலும் அழமாட்டாள். பார்வையில் ஒரு குழந்தைக்கே உரிய சுட்டித்தனம் இருக்காது. எந்த நேரமும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக உட்கார்ந்திருப்பாள். ஒரு வேளை இது மன வளர்ச்சியற்ற குழந்தையோ (Mentally Retarded Child) என்று எண்ணி சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். உளவியல் ஹிப்னாடிச முறையில் ஆராய்ந்தபோது உண்மை தெரிந்தது.

லதாவுக்கு பிரச்சனை அவள் ஒன்பது மாதக் கருவாக தாயின் வயிற்றில் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. லதாவின் தாய் உஷாவுக்கு பயந்த மனசு, கணவன் குடித்துவிட்டு வந்து என்ன செய்வானோ என்ற தினசரி திகிலும், பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கூட அனுப்பாத அவன் குணமும் பீதியைத் தந்தன. இதை யாரிடம் சொல்லி அழுவது என்று அவள் தனக்குத்தானே சிந்தித்து மாய்ந்து போவாள். இந்த தாயின் பயமும், திகிலும் அவள் உடலைப் பாதித்தன. உடலில் உண்டான கருவையும் பாதித்தன. தாயின் மன இயல்புகளை குழந்தை அப்படியே பிரதிபலித்தது. அதனால்தான் கருவுற்றிருக்கும் நேரம் ஒரு தாய் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இங்கு லதாவும், அவள் அன்னையைப் போல உணர்ச்சிகளை உட்புதைத்து மன அழுத்தமும், மன இறுக்கமும் உள்ள குழந்தையாக பிறந்தவள். தாயின் மன பாரம் இங்கு குழந்தையை பாதித்தது. தக்க ஹிப்னாடிச சிகிச்சைக்குப் பின் பாதிப்பும் நீங்கியது.

அஞ்சு வயது குமாருக்கு எப்போதும் ஒரு வெறி. எதையாவது உடைப்பது, யாரையாவது அடிப்பது என்பது பழகிப்போன விஷயம். பக்கத்து வீட்டு பையனை இருப்புக் கம்பியால் அடித்து மண்டையை உடைத்தபோதுதான், இது சாதாரண பிரச்சனை அல்ல என்று குமார் மனோதத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டான்.

இவனை ஒரு வயது வரை "ரிக்ரஷன்" (Regression) முறையில் கடந்த காலத்திற்கு கொண்டு போயும் எந்தத் தடயமும் கிடைக்காததால், அதற்கு முந்தைய கருவறை பருவத்திற்கு (Womb Stage) கொண்டுபோய் ஆராய்ந்தபோது குமார் சொல்லத் துவங்கினான்.

"அப்பா, அம்மாவை அடிக்காத நாளே கிடையாது. கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பார். பாட்டியும், அம்மாவுக்கு சூடு வைப்பாள். தலை முடியை பிடித்து இழுத்து அடிப்பாள். அம்மா அழுதுகொண்டே இருப்பாள்." தன் ஆத்திரத்தையெல்லாம் கோபமாகக்கூட காட்ட முடியவில்லையே என்று குமாரின் அம்மா ஆத்திரங்களை உட்புதைத்தாள். உட்புதைக்கும் உணர்வுகளும் அப்படியே வயிற்றில் கருவாக இருக்கும் குமாரை சென்றடைகின்றன. ஒவ்வொரு நரம்பிலும் ஆத்திரத்தையும், வெறியையும் அவன் பிரதிபலிக்கிறான் என்பது தெரிந்தது. தக்க உளவியல் சிகிச்சை அளித்தபின் குமார் சாதுவாக மாறிவிட்டான்.

கருவிலேயே பிரச்சனை தொடங்கிவிடுகிறதா என்று அதிசயப்படுகிறீர்களா? வேண்டாம். அதைவிட அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது.

அதுதான் முற்பிறவி, பாதிப்பு, கருவாக நீங்கள் இந்த உலகத்திற்கு வருமுன் கடந்த பிறவியில் ஏற்பட்ட பாதிப்பு. நம்ப முடியவில்லையே என்கிறீர்களா?

அமெரிக்க உளவியல் மருத்துவ பல்கலைக்கழகம் பல வருடங்கள் ஆராய்ந்து முற்பிறவி அச்சங்கள் (Past Life Phobias) என்று ஒன்று இருக்கிறது; அது இன்றைய நல்வாழ்வை பாதிக்கிறது. அந்த பாதிப்பால்தான் நம் புத்தகத்தில் இல்லாத புதுவகை மனநோய்களுக்கு ஆளாகிறோம் என்று கண்டுபிடித்து, நிரூபித்தும உள்ளது.

கருவில் திருவுடையவர் என்று சொல்லும் வார்த்தை எத்தனை உண்மையானது! அன்று நம் முன்னோர்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். பயம், சஞ்சலம் எதுவுமின்றி நிம்மதியுட்ன அவள் இருந்தால்தான் பிறக்கும் குழந்தை நல்ல குணம் இயல்புகளைக் கொண்டிருக்கும் என்று நம்பினார்கள்.

விஞ்ஞானமா - மெய்ஞானமா?

நம் இதிகாசங்களும், புராணங்களும் இதே கருத்தைத்தான் சித்தரிக்கின்றன. மகாபாரதத்தில் பத்மவியூகம் அமைப்பதைப் பற்றி கண்ணன் பேச, கருவிலிருக்கும் அபிமன்யூ அதைக் கற்றான் என்கிறார் வியாசர். அதேபோல் ஹிரண்யனின் மனைவி லீலாவதி பிரகலாதனை கருவில் சுமந்திருந்த நேரம் நாரதர் கூறிய நல்ல ஆன்முக கருத்துக்களை அந்த கருவிலிருக்கும் குழந்தை "ம்" கொட்டி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாயோ தூக்கத்திலிருக்கிறாள். பிற்காலத்தில் அரக்கனக்குப் பிறந்த அந்த குழந்தை சிறந்த அறிவும், ஆன்மீக திறனும் கொண்டு விளங்குகிறது. இப்படி கருவிலிருக்கும் போதே கல்வியை கலைகளை பயின்றதை பல மெய்ஞானக் கதைகள் கூறுகின்றன. இவை கற்பனை, சாத்தியமில்லாத ஒன்று என்று அதைப் பலர் ஒதுக்கித் தள்ளினர்.

இன்று விஞ்ஞானம் அந்தக் கருத்துக்கள் உண்மை என்று நிரூபித்துள்ளது. கருவிலிருக்கும் குழந்தை நல்ல இசையைக் கேட்கும்போது அதன் அறிவுத்திறனும், மற்ற திறமைகளும் மேம்பட்டு விளங்குவதாக ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன.

கருவிலிருக்கும் குழந்தையின் செவிப்புலன் மிகவும் கூர்மையாக இருக்கிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. அந்தக் குழந்தை இசையை மிகவும் விரும்புகிறது. சிட்னியிலிருள்ள ராயல் மருத்துவமனையில் கர்ப்பிணியான அறுபது பெண்களை வைத்து மருத்துவர்கள் ஓர் ஆய்வு நடத்தினர். இந்த தாய்மார்கள் தினமும் நல்ல இசை, பிரசங்கங்கள் முதலியவற்றை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தைகள் பிறந்த மூன்று வயதானதும் இந்த குழந்தைகளின் அறிவுத்திறன், இசை ஆர்வம், குண இயல்புகள் முதலிய பரிசோதனை செய்யப்பட்டன.

இதேபோல நல் இசையை, பிரசங்கத்தை கேட்காத கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தைகளின் அறிவுத்திறனும் பரிசோதிக்கப்பட்டன.

நல்ல இசையையும், பேச்சுக்களையும் கருவில் இருக்கும்போது கேட்ட குழந்தைகள் அறிவுத்திறனும், இசை ஆர்வத்திலும் குண இயல்புகளிலும் மிகவும் மேம்பட்டிருந்தனர். நல்லிசையை கேட்காத குழந்தைகள் மந்த புத்தி உடையவர்களாக, வன்மையான குணம் கொண்டவர்களாக அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிவிக்கும் செய்தி என்ன? பிறக்கும் குழந்தை தைரியத்துடன், விவேகத்துடன் புத்திசாலியாக விளங்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள் அமைதியான சூழ்நிலையில் எப்போதும் இருக்க வேண்டும்.

வீரம், விவேகம், அறிவுத்திறன் வளர்க்கும் புத்தகங்கள் உரக்க காதில் கேட்கும்படி படிக்க வேண்டும். இதைக் கேட்கும் குழந்தை பிற்காலத்தில் அப்படியே உருவாகிறது.

கருவில் கற்கும் கல்வியும் கலைகளும்
காலம் தோறும் தொடரும் காவியம
பிறவிகள்தோறும் பிரியாமல் தொடரும்
அன்னை வரையும் அற்புத ஓவியம்.

கல்வியும், கலைகளும் பயிலவேண்டிய காலம் மண்ணில் பிறந்த பிறகு அல்ல, அதற்கு முன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. இதனால்தான் அமைதியற்ற குடும்பங்களில் பிறக்கும் குழந்தை மனநோயாளியாகவோ, பயந்த சுபாவமுள்ளவராகவோ உலகில் ஜனிக்கிறது.

இதைப்பற்றி விரிவாக "கருவில் ஏற்படும் மன பாதிப்பு" என்ற புத்தகத்தில் காண்போம். அதனால் கருவைச் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன், மன அமைதியுடன் இருப்பது அவசியம்.

தாய்மார்களே! உங்கள் குழந்தையின் தலை எழுத்து குணநலன்கள் ஆகியவை கருவிலிருக்கும்போதே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன. அவன் நல்லவனாக பிறப்பதும், தலைவனாக உருவாவதும் உங்கள் கையில், உங்கள் குடும்பத்தாரின் கையில்தான் இருக்கிறது.

உங்களக்காக இல்லாவிட்டாலும், பிறக்கப் போகும் உங்கள் செல்வக் குழந்தைக்காக மன அமைதியுடன் இருக்க பழகிக்கொள்ளுங்கள். டென்ஷன் ஏற்படும் சூழ்நிலைகளை தவிருங்கள். நீங்கள் சாப்பிடும் உணவைவிட உணர்வுகளே - உங்கள் உணர்வுகளே மிகவும் முக்கியம்!

உங்கள் குழந்தை உங்களிடமிருந்து உணவை மட்டும் பெறவில்லை. உங்கள் உணர்வுகளையும் சேர்த்தே பெறுகிறது; பிரதிபலிக்கிறது என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்!

"எந்தக் குழந்தைகயும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே!
அவன் நல்லவனாவதும், தீயவனாவதும
அனனைக் கருவினிலே, அன்னை வளர்ப்பினிலே!"


வெப்துனியாவைப் படிக்கவும்