இன்றைய சூழலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர்.
எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான். பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.
அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும்.
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம். நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.
* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.