அந்த நபருக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. வயது 70. நல்ல அறிவாளிதான். பல தரப்பட்ட மக்களுடன் இயல்பாகப் பழகக் கூடியவர். ஆனால் வீட்டிலோ அவர் அடிக்கடி மன வியாதி வந்தது போல காணப்படுவார்.
FILE
மனைவியும், வாரிசுகளும் அவரது நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏன் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாது. வாரிசுகளாவது வளர்ந்த பிறகு வெளியே சென்றுவிட்டார்கள். ஆனால், மனைவி? குழந்தைகளுடன் கணவரையும் தாங்க வேண்டிய நிர்பந்தம். அந்த காலத்து பெண்மணியான அவர், கடைசி காலம் வரை சேர்ந்து தான் இருக்க வேண்டும் என்று ‘விதியை’ நொந்துகொள்வார்.
ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்னால் கணவருடன் தனிமையில் பல்வேறு விஷயங்களை மனைவி மனம் விட்டு பேசியப் போது, பத்து வயதில் தனது வீட்டில் நடந்த பாலியல் வன்முறையை கணவர் பகிர்ந்துகொண்டார். அதை சொல்லும் போது, இந்த வயதிலும் அவரிடம் நடுக்கம் வெளிப்பட்டது. கணவரின் மன நோய்க்கு அந்த வன்முறை தான் காரணம் என்பது மனைவிக்குப் புரிய நேரமாகவில்லை. இந்த வயதிலாவது உண்மை வெளிப்பட்டதே என்று நிம்மதியடைந்தார்.
அந்தக் கணவரைப் போன்றே ஏராளமானவர்கள் சமுதாயத்தில் நடமாடுகிறார்கள். எதனால் அவர்களுக்கு அந்த பிரச்சனை வந்தது என்பதை அவர்களால் இயல்பாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்தாலும் வெளியில் சொல்ல முடியவில்லை.
நிச்சயமாக யதார்த்த வாழ்க்கையால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை என்பது மட்டும் புரியும். ஆனால் மூலக் காரணம் புரியாது. மனம் விட்டு சொன்னால் என்ன நினைப்பார்களோ என்ற கவலை. மன உளைச்சல் வந்தால் அதிலிருந்து எப்படி வெளிப்படுவது என்ற பயிற்சி நமக்கு இல்லை. நவீன காலத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடம் கூட மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே சொல்ல முடிவதில்லை.
அதனால் கவனத்தைத் திசை திருப்புவதுதான் தீர்வு என்று சொல்லப்படுகிறது. அதனாலேயே ஏதாவது ‘பிசி’யாக்கிக் கொள் என்று பலரும் சொல்கிறார்கள். உண்மையில் வேலையில் மும்முரமாக ஈடுபடுவது மன உளைச்சலுக்கு மருந்தல்ல. அது தற்காலிகமான நிவாரணம் மட்டுமே. நிரந்தர தீர்வு அல்ல. மீண்டும் நம் உடலிலோ அல்லது மனதிலோ சோர்வு ஏற்பட்டால் மீண்டும் பிரச்சனை ஏற்படலாம். அதனால் முழுவதுமாக வெளியே வருவதே நல்ல தீர்வு.
ஒருவரின் மனது என்ன நினைக்கிறது என்பது எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும் மற்றவருக்குப் புரிவது சாத்தியமல்ல. ஏன் சம்மந்தப்பட்ட நபருக்கே புரியாமல் போகலாம். பெரும்பாலான மனநோய்கள் ஆழ்மனம் சம்மந்தப்பட்டது. நிகழுலகிலேயே பல்வேறு பிரச்சனைகளிலும், நினைவுகளிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ஆழ்மனத்தை உற்று நோக்கும் திறன் இருப்பது கடினம். தங்களைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களின் உதவியைக் கோரலாம். இல்லாவிட்டால் மனோதத்துவ மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் அணுகலாம். நம் எண்ண அலைகளை முழுமையாக அவர்களிடம் தெரிவிப்பது அவசியம்.
இப்போது உங்கள் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் அனைத்தையும் நினைவு கூருங்கள். அதற்கு காரணமானவர்கள் யாரோ, அவர்கள் மீது ஆத்திரப்பட எதுவும் இல்லை என்று உணருங்கள். அவர்கள் ஏதாவது நமக்கு நன்மை செய்திருக்கிறாரா என்பதைச் சிந்தியுங்கள். பொதுவாக ஒருவர் நமக்கு செய்த நல்ல விஷயங்களை நாம் உடனே மறந்துவிடுவோம். தீய செயல்கள் மட்டுமே நம் மனதில் தங்கிவிடும். அதனால் அவர் செய்த நன்மைகளை பலமுறை நினைவு கூருவோம். அதை மனதில் வலுகட்டாயமாகப் பதிவு செய்வோம். அவர் மீது நாம் கோபப்பட்டால் நமக்கு தான் டென்ஷன் என்பதை உணருவோம். நல்லதை அழுத்திப் பதிய வைத்துக் கொண்டு தீயவற்றை விலக்குவோம். அவர் நமக்கு நெருக்கமானவர் தான் என்பதை உணருவோம்.
நம் மீது தாழ்வு எண்ணமோ அல்லது குற்ற உணர்வோ வைப்பதற்கு எதுவும் இல்லை என்பதையும் உணருங்கள். குற்றம் செய்வதும், அதைத் திருத்திக் கொள்வதும் யதார்த்தம் என்பதை உணருங்கள். நாம் தூய்மையானவர் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்.
கடைசியில் உணர்ந்து பாருங்கள். மனம் அமைதியானதை நீங்களே உணருவீர்கள்.