உடல் நலம் பாதிக்கப்பட்டு கவலையுடனோ அல்லது மன அழுத்தத்தாலோ பாதிக்கப்பட்டு இருப்போருக்கு ஒரு இனிய செய்தி. டாக்டர் வந்து நோய் குறித்த தகவலைக் கேட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய கணினியே உங்களின் நோய்க்கு விரைவில் சிகிச்சை அளிக்கும்.
அதுபோன்ற கணினிக்கான இன்டராக்டிவ், மல்டி மீடியா புரோகிராமை அமெரிக்காவில் தேசிய விண்வெளி உயிரி மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த (National Space Biomedical Research Institute - NSBRI) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகால அடிப்படையில் விண்வெளிக் கலங்களில் செல்வோருக்காக மேற்கொள்ளப்படும் இந்த ஆராய்ச்சியில் அச்சுறுத்தல்களும் இல்லாமல் இல்லை. கணினி மூலமான இதே சிகிச்சை முறை பூமியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அமெரிக்காவைப் பொருத்தவரை மனச்சோர்வு அல்லது மனக் கவலையே பல வியாதிகளுக்கும் அடிப்படையாக அமைகிறது.
மனக்கவலைக்கு சிகிச்சை என்பது விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமான ஒன்று. அந்த வகையில் மல்டி மீடியா மூலம் பல்வேறு விதமான மனோதத்துவ காரணிகளை உணர்ந்து அவர்களுக்கு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
இவை தவிர விண்வெளி வீரர்களுக்கு இடையே கருத்து மோதல், மன அழுத்தம், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றுக்கும் விண்வெளிப் பயிற்சியின் போதே அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.