புற்றுநோய் பெண்களிடம் மன அழுத்தம்?

புதன், 1 அக்டோபர் 2008 (13:01 IST)
பெண்களைத் தாக்கக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் மிகவும் குறிப்பிடத்தக்கது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், அதிக மன அழுத்தத்துடனும், சோர்வடைந்த நிலையிலும் இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மார்பகப் புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுள்ள 33 பெண்களையும், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் 33 பெண்களையும் 2 ஆண்டுகள் வரை நாள் முழுவதும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வின்போது அவர்களின் இதயத்துடிப்பு, மூச்சு விடும் திறன், உடல் செயல்பாடுகள் போன்றவை கண்காணிக்கப்பட்டது. மனோநிலை, மன அழுத்தம், கவலைகள், எதிர்ப்பார்ப்பு போன்றவையும் கண்காணிக்கப்பட்டது.

மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மகிழ்ச்சியின்றியும், சுறுசுறுப்பில்லாமலும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் அவர்களின் செயல்பாட்டுத் திறன், மூச்சுத் திறன், இதயத்துடிப்பு போன்றவற்றில் சாதாரணப் பெண்களில் இருந்து எவ்வித வேறுபாடும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், மனோரீதியாக கவலை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

தவிர, அவர்களின் மனோநிலையில் சோர்வு காணப்படுவதுடன் மன அழுத்தத்துடனும் இருப்பதும் தெரிய வந்திருப்பதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.

தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் நிபுணர்களுடன் கலந்தாய்வு மூலம் அதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்