ஆண்டு தோறும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் மனநலத் துறை இயக்குநர் சேகர் சக்ஸேனா கூறினார்.
தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா-வின் வெள்ளி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய ஸ்நேகா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 68 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதில் 75 சதவீதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்கு குறைவான 2,500 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க போதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தற்கொலை முயற்சியை தடுப்பது ஒவ்வொருவருடைய கடமை.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்கொலை முயற்சி சட்டப்படி தண்டனைக்கு உரியது என்பதை மாற்றுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் மனநலத்துறை இயக்குநர் சேகர் சக்ஸேனா, உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நான்கு குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மனநலம் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஆண்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ளாத 25 வயதுக்கும் குறைவானவர்களே, இதில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
75 சதவீத தற்கொலைகள் மன நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத குறைந்த வருவாய் நாடுகளிலேயே நடைபெறுகின்றன.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை எளிதில் தடுத்து விட முடியும். இதற்கு அரசு துறைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தொடர்பான கொள்கையை மேம்படுத்துவது, மன நலம் தொடர்பான மருத்துவ நிர்வாகத்தை மேம்படுத்துவது, மருத்துவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தற்கொலை தடுப்பு பயிற்சிகளை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றார்.
இந்திய மன நல சமூகத் தலைவர் எம். திருநாவுக்கரசு பேசுகையில், மருத்துவக் கல்வியில் தற்கொலை தடுப்பு குறித்த பாடமே இதுவரை இடம்பெறவில்லை. தற்கொலைகளை தடுக்க முதலில் அதுதொடர்பான பாடம் மருத்துவக் கல்வியில் இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.