மாதங்களிலே மார்கழியும் தையும் ஒரு மகிழ்ச்சியான, குதூகலமான மனோ நிலைகளை உருவாக்கவல்லது. குறிப்பாக தை மாதம் பண்டிகைகளுக்கான மாதம், விவசாயிகள் மட்டுமல்லாது அனைவருமே மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு பண்டிகைதான் பொங்கல்.
கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை குதூகலம் பொங்கல் கிரிக்கெட் டெஸ்ட் குதூகலத்துடன் இணைந்துவிடும். சேப்பாக்கம் மைதானம் அதற்கு முன்னரே களை கட்டிவிடும். பொங்கல் தினத்தன்று சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சென்று தங்களது ஹீரோக்களின் விளையாட்டை பார்த்து மகிழ்ந்தது இன்னமும் பலரது நினைவில் பசுமையாக பதிந்திருக்கும். அதுபோன்ற பசுமையான நினைவுகளை எழுப்பும் இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 1975ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியை நாம் நினைவுகூர்வோம்.
கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கிந்திய அணியில் அதிரடி வீரர்களான ராய் ஃப்ரெட்ரிக்ஸ், கிரீனிட்ஜ், ரிச்சர்ட்ஸ், காளிச்சரண், ஆல் ரவுன்டர்கள் ஜூலியன், பாய்ஸ் உட்பட ராபர்ட்ஸ், ஹோல்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் கிப்ஸும் அந்த பலமான அணியில் இருந்தார்.
நினைவில் நின்ற விஸ்வநாத் ஆட்டம்!
webdunia photo
WD
இந்திய ரசிகர்களுக்கு இன்று வரை அதிரடி பேட்ஸ்மென் என்றால் ஒரு பெயரைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த பெயர் விவியன் ரிச்சர்ட்ஸ். உலகப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த விவ் ரிச்சர்ட்ஸ் இந்த தொடரில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியை சகல விதத்திலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தது. அதில் விவ் ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய சதம் ஒன்றையும் (டெல்லி டெஸ்டில்) எடுத்திருந்தார்.
கொல்கத்தா டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சிற்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 2- 1 என்று முன்னிலை பெற்றிருந்தபோதும், தோல்வியால் ஆத்திரத்துடன் இருந்தனர். ஏனெனில் அப்போதெல்லாம் மேற்கிந்திய அணியை வெல்வது என்பதே அரிதான விஷயம்.
இந்த நிலையில்தான் அதிக எதிர்பார்ப்புடன் சென்னை டெஸ்ட்... அல்ல... பொங்கல் டெஸ்ட் ஜனவரி 11ம் தேதி துவங்கியது. ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம்மும் குதூகலமும் பொங்கிய அதே வேளையில் ஆட்டக்களத்தை பார்த்த கேப்டன்களுக்கோ சோர்வு. ஏனெனில் காய்ந்து போன, தூசியும் தும்பட்டையுமான ஒரு ஆட்டக்களமாக அது இருந்தது. பேட்ஸ்மென்கள் இதில் கஷ்டப்படவேண்டியிருக்கும் என்று கேப்டன்களான பட்டௌடி மற்றும் கிளைவ் லாய்ட் நினைத்தனர். ஆனால் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்தப்போட்டியில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த சுனில் காவஸ்கர் இல்லாதது கூட ரசிகர்களுக்கு அவ்வளவு ஏமாற்றம் அளிப்பதாக இல்லை. ஏனெனில் கம்பீரமான மேற்கிந்திய அணியின் ஆட்டத்தை பார்ப்பதற்கென்றே அன்று சேப்பாக்கம் நிரம்பி வழிந்தது.
ஆண்டி ராபர்ட்ஸின் அபார பந்து வீச்சு!
webdunia photo
WD
முதல் நாள் ஆட்டம் ஆண்டி ராபர்ட்சின் பயங்கர பந்து வீச்சையும், விஸ்வ நாத்தின் அபாரமான, தைரியமான 97 ரன்களையும் ரசிகர்களுக்கு அளித்தது. விஸ்வ நாத்திற்கு 'ஸ்டேண்ட்' கொடுக்க எதிர்முனையில் ஆளில்லை. 97 ரன்கள் எடுத்து அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்பு அனைவராலும் விஸ்வநாத்தின் இந்த இன்னிங்ஸ் உலக கிரிக்கெட்டில் விளையாடப்பட்ட சில அரிய ஆட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டது. இந்தியா 190 ரன்களுக்கு சுருண்டது. ராபர்ட்ஸ் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மேற்கிந்திய அணி இன்னிங்சை தொடங்கினர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விவ் ரிச்சர்ட்ஸ் அன்று 50 ரன்களை அடித்தார், கிளைவ் லாய்ட் அதிக சிரமத்துடன் 39 ரன்களை எடுத்தார். பிரசன்னா பந்து வீச்சின் ஃப்ளைட், அளவு மற்றும் திசை மாற்றங்களின் நுட்பத்திற்கு முன் மேற்கிந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தனர். இந்தியாவிற்கு எதிராக முதன் முறையாக 200 ரனகளுக்கும் கீழ் 192 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது.
2வது இன்னிங்சும் ராபர்ட்ஸ் அதிக பிரச்சனைகளை கொடுத்தார். 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று தடுமாறியபோது மீண்டும் ஆபத்பாந்தவர் விஸ்வநாத் கைகொடுத்தார். கெய்க்வாடுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 93 ரன்களை இருவரும் சேர்த்தனர். கெய்க்வாட் அன்று ஆடிய ஆட்டம் மறக்க முடியாத ஒன்று. 80 ரன்களை அவர் எடுப்பதற்கு ஆடிய ஆட்டம் ரசிகர்களின் நினைவை விட்டு அகலாதது. காவ்ரி 35 ரன்களை அதிரடியாக எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ராபர்ட்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 256 ரன்கள் எடுத்தது.
வெற்றிபெற 255 ரன்கள் தேவை என்ற நிலையில் பொங்கல் தினத்தன்று மேற்கிந்திய அணி ஃபிரடெரிக்ஸ் விக்கெட்டை பிரசன்னாவிடம் பறி கொடுத்து 38/1 என்று இருந்தது.
மறு நாள் அபாய வீரர் கிரீனிட்ஜை சந்தரசேகர் பவுல்ட் செய்தார். பிறகு இரவுக் காவலன் கிப்சையும் பவுல்ட் செய்தார் சந்திரசேகர். அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 10 நிமிடங்களே களத்தில் நிற்க முடிந்தது, பிரசன்னாவிடம் வீழ்ந்தார் ரிச்சர்ட்ஸ். லாய்ட் களமிறங்கி அடித்து ஆட முற்பட்டார் அவர் அடித்த அடியெல்லாம் ஷாட் லெக்கில் நின்று கொண்டிருந்த சோல்கர் உடம்பில் வாங்கி தடுத்து நிறுத்தினார். பொறுமையிழந்த லாய்ட் பிரசன்னா பந்து ஒன்றை மேலே எகிறி வந்து மைதானத்தை விட்டு வெளியே அடிக்க முயன்றார் முடியவில்லை, ஸ்டம்ப்டு ஆனார். 85/5 என்ற நிலையில் இந்திய வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் பலத்த ஆரவாரம் செய்தனர்.
முர்ரே, ஜூலியன், பாய்ஸ் என்ற அதிரடி வீரர்களை பிஷன் சிங் பேடி வீழ்த்தினார். மேற்கிந்திய அணி 154 ரன்களுக்கு சுருண்டது. 4 நாட்களிலேயே ஆட்டம் முடிந்து போனது. தொடரும் 2- 2 என்று சம நிலை எய்தியது. அன்றைய ஆண்டின் பொங்கல் அருமையான நினைவுகளை நம்மிடையே விட்டுச் சென்றது. வானொலியில் தமிழில் கிரிக்கெட் வர்ணனை பெரும் வரவேற்பை பெற்றது. ராம மூர்த்தி, கூத்தபிரான், சிறப்பு வருணனையாளர் ரங்காச்சாரி ஆகியோரது குரல்களை நம்மால் மறக்க முடியுமா...
வேகப்பந்து வீச்சாளரால் இந்தியா பெற்ற முதல் வெற்றி!
webdunia photo
WD
பொங்கல் தினத்தன்று நடந்த மற்றுமொரு மறக்கமுடியாத டெஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக 1980ம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு டெஸ்ட் போட்டி. கபில்தேவ் என்ற ஹரியானா புயல் இந்திய ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய சமயம் அது. ஏற்கனவே டெல்லியில் பெற்ற வெற்றியுடன் இந்தியா 1- 0 என்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. பாகிஸ்தான் அணியும் அசிஃப் இக்பால் தலைமையில் மஜித் கான், சாதிக் மொஹமத், வாசிம் ராஜா, இம்ரான், ஜாகீர் அப்பாஸ், மியாண்டாட் என்று பலமான அணியாக இருந்தது.
இந்திய அணியில் ரோஜர் பின்னி, கபில்தேவ், அதிரடி மன்னன் சந்தீப் பாட்டீலின் வருகை இளம் குதூகலத்தை அளித்து வந்த காலம்.
பொங்கல் தினத்தன்று சேப்பாக்கம் மைதானத்தில் இந்த டெஸ்ட் துவங்கியது. ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் சேப்பாக்கம் மைதானம் உள்ள சாலையில் இங்கும் அங்கும் ஏக்கத்துடன் அலைந்த படி கடற்கரை நோக்கி நடையை கட்ட தொடங்கியிருந்தனர்.
கபில்தேவின் அபார பந்து வீச்சிற்கு பாகிஸ்தான் முதல் நாளில் 7 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு மறு நாள் 272 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கபில் 4 விக்கெட்டுகளையும், கார்சன் காவ்ரி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தியா விளையாடத் துவங்கியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் விழுந்து கொண்டிருந்தாலும், கவாஸ்கர் ஆடிக் கொண்டேயிருந்தார், இம்ரான்கானின் அதிவேகப்பந்து வீச்சு மற்றும் அவரது தோற்றம் மற்றும் ஆளுமை சென்னை ரசிகர்களால் மறக்க முடியாதது. கபில்தேவ் களமிறங்கும் வரை கவாஸ்கர் ஆடினார். கபில் தேவ் அன்று ஆடிய ஆட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஆரவாரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது என்றால் மிகையாகாது. இம்ரான், சிக்கந்தர் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சுகளை கபில் தேவ் விளாசு விளாசென்று விளாசினார். இம்ரானின் பவுன்சர் ஒன்றை கபில் தேவ் ஹூக் செய்து சிக்சருக்கு அடித்ததை ஒருவராலும் மறக்க முடியாது. பந்து ஃபைன்லெக் எல்லைக்கோட்டருகே வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகையில் பட்டு மைதானத்திற்குள் தெறித்து விழுந்தது. டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்கள் அதுபோன்ற அதிரடியை கண்டிருக்க மாட்டார்கள் 98 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் கபில் தேவ் 84 ரன்களை விளாசியது, காவ்ரி மறு முனையில் எடுத்த 45 ரன்களை எடுத்தது ஆகியவற்றால் இந்தியா 430 ரன்களை குவித்தது.
பேட்டிங்கில் விளாசிய கைபில் தேவ் பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மியாண்டட்(52), வாசிம் ராஜா (57) தவிர ஒருவரும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 56 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார் கபில்தேவ். பாக் 233 ரன்களுக்கு சுருண்டது.
வெற்றிபெற இந்தியாவிற்கு தேவை 76 ரன்களே. சவானும் கவாஸ்கரும் இழப்பின்றி அதனை எடுத்து முடித்தனர். இம்ரான் கானின் ஒரு ஓவரில் சவுகான் 4 பவுண்டரிகளை அடித்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று. கபில்தேவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவரால் இந்தியா பெற்ற முதல் வெற்றி அது என்று கூறலாம்.
பொங்கலும் சென்னை டெஸ்டும் இணைபிரியாத நண்பர்கள். இப்போதும் பொங்கல் மாறாமல் உள்ளது. பொங்கல் டெஸ்ட் என்ற தோழன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. நாமெல்லாம் பொங்கலுக்கு காத்திருக்க, பொங்கலோ தன் நண்பன் சென்னை டெஸ்டின் வருகைக்காக காத்திருக்கிறது.