ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களது பாரம்பரியம், கலாச்சாரத்தின் அடிப்படையில் பண்டிகைகள் உள்ளன. அதில் உலகமே வியக்கும் இந்திய மக்களின் கலாச்சாரத்தில் தான் எத்தனை பண்டிகைகள், விஷேசங்கள். ஒவ்வொரு மதம், ஜாதிக்கும் பிரத்யேகமாக பண்டிகைகள் இருந்தாலும், இந்த வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
இதில் தமிழர் திருநாளான தைத்திருநாள் குறிப்பிடத்தக்கது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கூற்றின் அடிப்படையில் தைத்திருநாளை வரவேற்க, மார்கழி இறுதி நாளன்று பழைய, தேவையில்லாத பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவர்.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கலாகவும், மறுநாள் மாட்டுப் பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாட்டம் தொடர்ந்து நான்கு நாட்கள் நீடிக்கிறது. ஆனால், இன்றைய நவீன காலத்தில் பொருளாதாரத்தை மையமாக வைத்தே பெரும்பாலானோர் வாழ்வதால் தங்களது பாரம்பரியங்களை மறந்தவர்களாக காணப்படுகின்றனர்.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இன்றும் கொஞ்ச, நஞ்சம் காக்கப்படுகிறது என்றால், அதற்கான பெருமை கிராமங்களையே சாரும். அதிலும் குறிப்பாக எங்கும் பசுமை எழில் கொஞ்சும் கொங்கு நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு தனி மதிப்பு உண்டு.
தாராபுரம், பழனி, சேலம், தர்மபுரி, ஈரோடு, சத்தியமங்கலம், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளாப்பட்ட போதும சரி, முஸ்லீம் மன்னர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்களால் ஆளாப்பட்ட போதும் சரி தமிழ் கலாச்சாரம் மங்கியதில்லை.
தற்போதைய நகரமயமாதல், நாகரிக மாற்றம் என்ற போர்வையில் கொங்கு மண்டலத்திலும் கிராமங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக அப்பகுதி விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாக மாறிவருகின்றன.
இந்த மாற்றம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிற போதிலும், கொஞ்சு தமிழ் கொங்கு நாடு இன்றளவும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கொங்கு நாட்டில் பொங்கல் கொண்டாட்டம்:
வீடுகளுக்கு வெள்ளையடித்து, 'மா' இலைகளை தோரணங்களாக்கி, வாசலில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து தைத்ததிருநாளை வரவேற்பர். கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம்பூசி, பொட்டு வைத்து விவசாயமும், வியாபாரமும் மென்மேலும் சிறக்க கடவுளை துதிப்பர். கரும்புகள் குடைபிடிக்க மண்பானைகளில் பொங்கல் தயாராகும். சூரியன் உதிக்கும் திசை நோக்கி பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என்று குலவி சத்தமிடுவர் கூடு நிற்கும் தமிழச்சிகள்.
முதலில் கடவுளுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள், பிறகு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி, வாழ்த்துக்கூறி மகிழ்வர். கொங்கு மக்களுக்கு உண்மையான பொங்கல் பண்டிகை இவை தான் என்றாலும், இத்தோடு நின்று விடுவதில்லை தமிழர் திருநாள் கொண்டாட்டம். அந்தந்த பகுதி மக்களாகவே ஒன்றிகூடி, வீரத்தை பரிசோதிக்கும் விளையாட்டு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர். விதியெங்கும் விழா கோலமாகமாக காட்சி அளிக்க, மாட்டு வண்டி கட்டிக்கொண்டு கோவில்களுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் குடும்பம் சகிதமாக சென்று உண்டு மகிழ்வர்.
இதுவரை எத்தனை போட்டிகள், பொறாமைகள், ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அங்கே அனைத்தும் தவிடுபொடியாகிறது. 'தமிழர்' என்ற உணர்வு மேலோங்கும் போது, உண்மையான மகிழ்ச்சி பொங்கி மனிதர்களாகின்றனர்.
'மனதில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி, உறவுகளை புதுப்புத்திக்கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும் இந்த பொங்கல் பண்டிகை உலகிற்கே ஒற்றுமைத் திருநாளாகட்டும்!