வீட்டிலிருக்கும் பழையவைகளை எரித்து புதிய பொருட்களை வாங்கி வைக்கும் ஒரு பண்டிகைதான் போகிப் பண்டிகை. போகிப் பண்டிகைக்கு முன்பே வீடுகளை வெள்ளையடித்து, தூய்மைப்படுத்தி வேண்டாத, பழையப் பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்வர்.
போகியன்று அதிகாலையில் எழுந்து சேகரித்து வைத்த பழயவைகளை எல்லாம் போட்டு வீட்டின் வாயிலில் எரித்து அதை ஒரு பண்டிகையாகவே நாம் கொண்டாடி வருகிறோம்.
இதில் வீட்டில் உள்ள சிறுசுகளுக்குத்தான் அலாதி மகிழ்ச்சி. கையில் ஒரு மேளத்தைக் கொண்டு எரியும் குப்பைகளை சுற்றி உட்கார்ந்து டம் டம் என்று அடித்துக் கொண்டும், போயோ போய் என்று கத்திக் கொண்டும் ஆனந்தக் கூத்தாடுவார்கள். அன்றே நமக்கு பண்டிகை விடுமுறை தொடங்கிவிடும்.
போகியன்றே பொங்கலுக்கான வேலைகளும் ஆயத்தமாகிவிடும். பெரியவர்கள் வீட்டில் இருந்த பழையவைகளை எரித்துவிட்டதால் அன்று சந்தைக்குச் சென்று புதிய பொருட்களையும், புதிய பானைகளையும் வாங்கி வருவர். அவர்களுடன் சென்ற சிறுசுகள் என்ன சும்மாவா வந்து விடுவார்கள். பொங்கலுக்கு எடுத்த புத்தாடைக்கு ஏற்ற வளையல், கம்மல், பிள்ளைகளாக இருந்தால் விளையாட்டுப் பொருட்கள் என எல்லாவற்றுடன் வீடு வந்து சேர்வார்கள்.
மறுநாள் விடியும் வரை உறக்கமே வராமல் புத்தாடையின் நினைவாகவே கனவுகளில் புரண்டு புரண்டு பின்னர் அதிகாலையில் தான் இமைகள் ஒன்றோடு ஒன்று சேரும். அதற்குள் ஏதாவது ஒரு சின்ன சப்தம் கேட்டாலும் உடனே அடித்து எழுப்பியது போன்று எழுந்து அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்போம்.
அதிகாலையில் எழுந்த அம்மா வீட்டு வாயிலில் மிகப்பெரிய பொங்கல் பானைக்கு கோலமிட்டு, பக்கவாட்டில் கரும்புகளை நிற்க வைத்து தலை நிமிரும் வரை நாம் அங்குதான் சாட்சியம். பின்னர் குளித்து முடித்து அம்மா கமகமவென சமையலறையில் வடை, பாயாசம் உள்ளிட்ட அறுசுவைகளை சமைத்து வரும் வரை நமது புத்தாடையை தொட்டுத் தொட்டுப் பார்த்தே பல இழைகள் இழைந்து போயிருக்கும்.
webdunia photo
WD
சரியாக மணி 12 ஆகும்போது வாசலில் பொங்கலிட்டு சூரியனுக்கு தீப ஆரத்தி எடுத்து பொங்கலோ பொங்கல் என்று எழுப்பும் ஒலி அந்த சூரியக் கதிர்களைத் தொட்டுவிட்டு திரும்பும். வீட்டிற்குள் ஆரத்தியை கொண்டு வந்து காட்டி பின்னர் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு வீட்டின் பெரியவர், ஒவ்வொருவருக்காகவும் எடுத்து வைத்திருந்த ஆடைகளை ஆசீர்வதித்து வழங்குவார்.
இதற்குத்தானே இவ்வளவு நேரம் காத்திருந்தது என்ற மகிழ்ச்சியில் கொடுத்த புத்தாடையை நொடிப்பொழுதில் உடுத்திக் கொண்டு வந்து உணவருந்த அமருவோம். அதை ஏனோ தானோ வென்று மென்று முழுங்கியதும் நமது அடுத்த குறிக்கோள் பக்கத்து அக்கத்து வீடுகளில் உள்ள நமது தோழர்கள்தான். அவர்களுக்கு நமது ஆடைகளை காண்பிப்பதும், அவர்களது ஆடைகளை பார்த்து மகிழ்வதிலும் ஒரு தனி ஆனந்தம்.
சரி புத்தாடை ஆசை அடங்கியதும்தான் நமது வீட்டில் இருக்கும் கரும்பு, இனிப்புகள் மீது நமது பார்வை திரும்பும்
webdunia photo
WD
கரும்புகளை வெட்டி வெட்டி தீர்த்து அப்பாவை மற்றொரு கருப்புக் கட்டை வாங்கி வரச் சொல்லி நச்சரிக்கும் வரை பிள்ளைகளின் கொண்டாட்டங்கள் ஏராளம் ஏராளம்.
இதையெல்லாம் அனுபவித்த நமக்குத்தான் தெரியும் போகியும், பொங்கலும், மாட்டுப் பொங்கலும் தமிழர் திருநாள் என்று.
குக்கரில் சிறைப்பட்ட பொங்கல்!
இன்று நமது பிள்ளைகளோ போகி என்றால் ஏதோ இன்றைய குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் கொளுத்துவது என்று எண்ணுகின்றனர். அன்று ஒரு நாள் விடுமுறைக் கணக்கில் சேர்த்துக் கொள்கின்றனர் அவ்வளவே.
நமக்கு அப்போதிருந்த அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இன்று மறைந்து, போகியும் பொங்கலும் பிள்ளைகளுக்கு தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் செலவழிந்து கொண்டிருக்கின்றன.
ஆசிர்வதித்து புத்தாடைகளை அளிக்க வீட்டில் பெரியவர்களும் இல்லை. பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்க வீட்டு வாயில்களும் இல்லை.
பானையில் பொங்கி வழிந்த பொங்கல் இன்று குக்கருக்குள் சிறைபட்டுக் கொண்டிருக்கின்றது. பொங்கலோ பொங்கல் என்று நாம் இட்ட சப்தத்தை இன்று குக்கர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பொங்கல் போன்றுதான் நமது பிள்ளைகளின் பொங்கல் கொண்டாட்டங்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அலைந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டிலிருந்தாவது பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை கூடிக் கொண்டாடி ஆனந்தம் அடைவோம்.