ஏரோட்டும் விவசாயிக்கு ஏரோபிளேன் எப்போது?

சனி, 12 ஜனவரி 2008 (17:17 IST)
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

....இந்த வாசகத்தை இன்றைய நாகரீக - தகவல் தொழில்நுட்ப, இயந்திரகதியாகிப் போன உலகில் நாம் யாரேனும் நினைத்துப் பார்த்து செயல்படுகிறோமா? என்று கேட்டால்...

நிச்சயமாக இல்லை என்பதே 90 விழுக்காட்டினரின் பதிலாக அமையும்.

webdunia photoWD
அதிகாலையில் சேவல் கூவும் வேளையில் எழுந்து, வயிறார நீர்த்த தண்ணீருடன் கஞ்சியும், பச்சை மிளகாயும், மாவடுவும் சேர்த்து சாப்பிட்டு, அதையே பித்தளை தூக்குச் சட்டியிலும் போட்டு எடுத்துக் கொண்டு, வீட்டின் புழக்கடை தொழுவத்தில், இரவில் சாப்பிட்ட வைக்கோலை அசைபோட்டுக் கொண்டிருக்கும் எருதுகளை அவிழ்த்து, ஏரில் பூட்டி ஊருக்குத் தொலைவில் இருக்கும் வயலை நோக்கிச் சென்ற காலம் எல்லாம் என்னவாயிற்று?

காலைச் சூரியன் கீழ்வானில் சிவந்து, ஒளிப்பிழம்பாக எழுந்து உச்சந்தலைக்கு வருவதற்கு சற்றுமுன், கொண்டுவந்த கட்டுச் சோற்றை அங்கு கிடைக்கும் தினையோ, அக்கம்பக்கத்து வயக்காரர் கொண்டுவந்த கருவாடு, நேத்துவைத்த மீன் குழம்பையோ தொட்டுக் கொண்டு ஒருபிடி பிடித்து, களைப்பு நீங்க வரப்பில் வானமே எல்லையாக சில கண நேரம் கண் அயர்ந்து, மீண்டும் பதறி எழுந்து வயலை ஆழ உழும் வேலையைத் தொடர்ந்த காலம் எங்கே போயிற்று?

மேற்கேயிருந்து செங்கோட்டை பாஸஞ்சர் ரயிலு போயி, மாலைச் சூரியன் மங்கும் வேளையில், உழவை முடித்து, வாய்க்காலில் ஓடும் சேத்துத் தண்ணீரில் கை,கால் கழுவி, மாடுகளுக்கும் தண்ணீர் காட்டி இருள் மங்கும் நேரத்தில் புறப்படுகையில், இளைய மகன் சீனி மிட்டாய் கேட்டானே, இன்னைக்கி என்ன சொல்லி சமாளிக்க.. என்ற யோசனையுடன் வீடு நோக்கிப் செல்கையில்...

"எல. வேலாண்டி, அந்த பெரிய வயலுக்கு தண்ணி அடைக்கச் சொன்னன.. செஞ்சியா.. அப்புறம் உம் பொண்ணு கல்யாணத்துக்கு பணம் கேட்டிருந்தியே எப்ப வந்து வாங்கிக்கப் போறன்னு சொன்னா எனக்கும் வசதியாயிருக்கும்லா.. " என்றவாறே எதிரே வரும் வயல் உரிமையாளருக்கு, 'தண்ணி அடைச்சிடேன் எசமான்.. பணத்த அடுத்த வாரம் வாங்கிக்கறேன்.. ஆனா இப்ப ஒரு சமாச்சாரம். ஐயா தான் பெரிய மனசு பண்ணி தரணும்" என்றவுடன்.

"என்னல சொல்லு... வழக்கம்போல நீ என்ன கேட்டுறப் போற.. துட்டுதானலே..." என அங்கலாய்த்தவாறே வேட்டி மடிப்பில் இருந்து 5 ரூபா பச்சை நோட்ட எசமான் எடுப்பதற்குள், வேலாண்டி மனதில் மகிழ்ச்சித் துள்ளல் ஓடுமே... அந்த துடிப்பும், சந்தோஷமும் இப்போ எங்கே போனது?

மேற்சொன்னதெல்லாம் முன்பொரு காலத்தில்....

"ஏ.. பால்பாண்டி, ஒம் பையன் படிச்சிட்டிருந்தான்லா. அவன் இப்ப என்ன செய்யறான்? அவனை துணைக்கு கூட்டிக்கிட்டு இந்த மரத்தை வெட்டிக் குடேன்".

"உங்களுக்குத் தெரியாதா.. அவன் இப்ப மிலிட்டரிலே சேர்ந்திட்டான்லா. அதுவும் இல்லாம இந்த வயலு, தோட்டம், இதெல்லாம் வேண்டாம்னுதான் அவன வடக்க அவ அக்கா வீட்டுக்கு முன்னயே அனுப்பிட்டேன். இரண்டாவது மவ டவுண் காலேஜிலே படிச்சால்ல. அவளுக்கு காலேஜில இருந்தே வேலைக்கு கூப்பிட்டாங்களாம். அதான் கம்ப்யூட்டருல வேலையாம். எல்லா செலவும் போவ நிறைய ரூபா எனக்கே அனுப்பி வைக்கேன்னு சொல்லிட்டி போனவாரம்தான் போயிச்சு"

"உன்னாலயும் முடியல. எம் மவனுவலும் ஆஸ்திரேலியா, யு.எஸ்-னு போய்ட்டு வாரம் ஒருக்க தான் போன்லேயே பேசுறானுக. ஏரோபிளேன்ல் தினமும் எண்ணூரு மைலு போய் வேலைபார்க்கறனுகளாம். நா மட்டும் இந்த வயசுல வயலக் கட்டிக்கிட்டு என்னத்த பண்ணப்போறம்ல.. பேசாம நீயே வயல எடுத்துக்கிட்டு ஏதாவது கொடுத்துடு. அப்புறம் பயிர்வைக்கிறத பற்றி எனக்குக் கவல இல்ல பாரு. நான்பாட்டுக்கு வீடு உண்டு, கோயில் உண்டுனு நானும் நிம்மதியா இருப்பேன்ல. யோசிச்சு நல்ல முடிவா சொல்லுப்பா... "

இப்போது விஷயத்துக்கு வருவோம். சென்னை போன்ற பெருநகரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

webdunia photoWD
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடும், 2-ம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள், விவசாயத்தை சார்ந்துள்ள சிறிய நகரங்கள், கிராமங்களிலும் கூட இன்றைய கால ஓட்டத்தில் என்ன நிலை உள்ளது?

நம்மதான் இந்த மாட்டையும், தொழுவத்தையும், வயலையும் கட்டி மாரட்டிச்சுட்டோம். நம்ம பிள்ளைகளையாவது கம்ப்யூட்டரு படிக்கவைச்சு டவுணுக்கோ, அல்லது வெளிநாட்டுக்கோ அனுப்பி, அவங்க வாழக்கையாவது பூடிசு, கோட்டு, சூட்டோட இருக்கணுமப்பா.. என்பதே 80 முதல் 90 விழுக்காட்டு கிராமத்தவர், விவசாயிகள், தோட்டத்தினர் மத்தியில் நிலவும் மன ஓட்டமாக உள்ளது என்பதை யாராலும் மறுத்து விட முடியாது.

கிராமங்களின் வளர்ச்சியே ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி. கிராமங்களில் விவசாயம் பெருகினால் மட்டுமே பொருளாதாரம் வளரும் என்ற மகாத்மாவின் கனவெல்லாம் மெதுமெதுவாக தேய்ந்து கொண்டே வருகிறது.

ஒருபுறம் உள்கட்டமைப்பு வளர்ச்சி, பாலங்கள், பங்களாக்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என விவசாய நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி பிளாட் போட்டு விற்று வெற்றிடமாக்கி வருகிறோம்.

இதுபோன்ற மனோநிலையில் மாற்றமில்லாமல் உழவுக்கு எங்கேயிருந்து வந்தனை செய்யப் போகிறோம்?

இதேநிலை நீடிக்குமானால், உழவர், ஏர், எருது போன்றவற்றையெல்லாம் எதிர்கால சந்ததியினருக்கு படம் வரைந்து காட்ட வேண்டிய நிலைதான் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

அதற்காக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை - கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சியை எதிர்க்கிறோம் என அர்த்தமில்லை. ஐ.டி, ஐடிஈஎஸ் தொழில்கள் நிச்சயம் மேம்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை.

அதே வேளையில், விவசாயத்திற்கும் மதிப்பளித்து, உழவுத் தொழிலைப் போற்றிப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை உறுதிமொழியாகக் கொள்வோம்.

நாட்டில் விவசாயம் வளர்ந்தாலே பொருளாதார வளர்ச்சி உத்வேகத்தை எட்டும் என அண்மையில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்ததை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

விவசாய நிலங்களை பெருக்க வேண்டியதில்லை. இருக்கும் விளைநிலங்களில் உரிய வகையில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலையை ஏற்படுத்தினாலே போதும்.

அறுவடை முடிந்து, புத்தரிசி பொங்கலிட்டு, உறவினர் புடைசூழ, வயிறு புடைக்க பகுத்துண்டு பலன் பெறுவதோடு, விவசாயத்திற்கு உதவும் மாடுகளையும், எருதுகளையும் போற்றிப் பாதுகாக்க அவற்றுக்கும் பொங்கல் படைத்து வழிபடுவோம்.

"எல்லோர்க்கும் யாவும் உண்டு, என்றாகும் காலம் இன்று" என்ற கவிதை வரிக்கு ஏற்ப, தகவல் தொழில்நுட்பத்தை தத்தமது மொழியில் படைத்து, உழவர்களுக்கு உபயோகமான தானிய ரகங்களை தேடு பொறியில் அவர்களே தேடி, அந்தப் பயிர் விளைச்சலைப் பெருக்க ஏதுவாக குறிப்பிட்ட ரக விதைகளை அதிகம் அனுப்புமாறு மின்னஞ்சலிலும், வீடியோ கான்பரன்சிலும் மத்திய அமைச்சருடனும், பிரதமருடனும் சாமான்ய உழவன் தொடர்பு கொண்டு உரிமையைக் கேட்டுப் பெறும் நாள் அடுத்த பொங்கலுக்குள் வரட்டும்.

அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.