சமையலில் சுறுசுறுப்பானாள் ராதா. ஷிவாவால் ஈடுபாட்டுடன் பல்துலக்க முடியவில்லை. யோசனையில் மூழ்கினான். திருச்சி அரசு பள்ளியில் படித்த 2001, 02 -ம் வருடங்கள் நினைவலையில் வந்து சென்றன. வந்த வேகத்தில் சென்றும் விட்டன.
"ரா..?"
"ம்..."
"கம்மிங் ஃபிஃப்டீன்த் பொங்கல் ஃபெஸ்டிவல்."
"தெரியும்... லீவ் ஷெட்யூல்ல பார்த்தேன்"
"ஊருக்கு போலாம்னு தோணுது"
"இஸ் இட்? கிரேட்... லாஸ்ட் 10 இயர்ஸா தோணவே இல்லையே. நோ ப்ராப்ளம் போயிட்டு வா. என்னால முடியாது. அசைன்ட்மென்ட்ஸ் இருக்கு. ஸ்மிதாவை, அவ ஸ்கூல்ல எஸ்கர்ஷன் கூட்டிட்டு போராங்களாம். ஏதோ... மெல்போர்ன்னு சொன்னா..."
சென்னை வந்து 20 வருடமாகிவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்க்க வேண்டுமானால், அவர்கள் வந்தால்தான் உண்டு. வேலை... வேலை... வேலை... இந்த மூன்றும் தான் ஷிவாவுக்குத் தெரிந்தவை. அமெரிக்க முதலாளிக்கு சென்னையில் இருந்து செய்து மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியம் ஈட்டும் தொழிலாளி.
சுண்டு விரலால் தூக்கக் கூடிய மெல்லிய, நீல செல்பேசியை எடுத்தான். அதில், மின்னஞ்சல் அனுப்பி அலுவலகத்துக்கு விடுப்பு அறிவித்தான். பின், அதிலேயே ஏர் டெக்கானில் திருச்சிக்கு முன்பதிவு செய்தான்.
இப்படி யோசித்துக்கொண்டே விமானத்தில் படிகளில் இருந்து இறங்கினான். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட காரில் ஏறினான். ஒரு லட்ச ரூபாய் கார் சீறியது.
குண்டும் குழியுமான சாலைகள் இல்லை. குடிசைகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை. சைக்கிள்கள், பைக்குகளாக மாறியிருந்தன. வயல்வெளிகள் மட்டும் அன்று பார்த்தது போன்றே பச்சையாய் இருந்து. ஜீன்ஸ் போட்ட விவசாயி, வானத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தார். 10 நிமிடத்தில் வீட்டுத் தெரு, இல்லை... சிமென்ட் சாலை வந்தாகிவிட்டது.
கோவிந்தபுரம்...
தனது கிராமத்தை தூக்கிக் கொண்டுபோய் வேறெங்காவது வைத்து விட்டார்களா? பிரம்மிப்பாக இருந்தது ஷிவாவுக்கு. இந்த மாற்றமெல்லாம் எதிர்பார்த்தது தானே என்று உணர்ந்தபோது பிரம்மிப்பு பறந்து போனது.
அமைதியானான். 'மாற்றம்... ம்... நல்லதுதான். எங்கு பொங்கினால் என்ன? சென்னை - லாஸ் எஞ்சல்ஸ் ஆனப்ப, கோவிந்தபுரம் - சென்னையாகிறதுல ஆச்சர்யம் இல்லையே' தனக்குத் தானே தேற்றிக்கொண்டான்.
..........
"அப்பா மறக்காம அடிக்கடி மெயில் பண்ணுங்க. உடனே ரிப்ளை பண்ணலண்ணு கோச்சுக்காதீங்க. ஒன்ஸ் இன் எ வீக்லி அனுப்பிடுறேன்"
"சரிடா... சிமிதாவை அவ வரைஞ்ச டிராயிங்க அனுப்ப சொல்லு"
காரில் ஏறியபோதுதான் அந்தப் பெண்மணி எதிரே வந்தாள். என்னுடன் 3-ம் வகுப்பு படித்த, பெயர் மறந்துபோன நண்பனின் அம்மா. அவளை 'வண்ணாத்தி' என்றே அனைவரும் அழைப்பர்.
அவள் அப்பாவை நோக்கிச் சென்றாள்.
"ஏனுங்க வீட்ல பால் பொங்குச்சிங்கிளா?"
"ம்" ஒரு சொல்லில் பதில் சொன்ன அப்பா, தனது பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து, அப்பெண்மணியிடம் நீட்டினார்.
'இல்லை... நம்ம ஊரு மாறல' என்பதை உணர்ந்தான் சாஃப்ட்வேர் என்ஜினியர் ஷிவா!