உழவரின் வாழ்வு உயரட்டும்!
சனி, 12 ஜனவரி 2008 (15:06 IST)
"கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.... விவசாயி" என்று அழைக்கப்படும் உழவனின் இந்தாண்டு அறுவடைத் தொடக்கம் எந்த நிலையில் உள்ளது என்றால் மத்திய நிவாரணக்குழு வந்து அண்மையில் பெய்த மழையால், அறுவடை செய்ய வேண்டிய நெற்கதிர்களுக்கான இழப்பீட்டை முடிவு செய்ய வேண்டிய பரிதாபகரமான அவல நிலையில் தான் உள்ளது.
ஏதோ இந்த ஆண்டில் பெய்த மழையால் இந்த நிலை உருவாகிவிட்டதாக மட்டும் கருதி விட வேண்டாம். நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கையே உழவுத் தொழிலை நம்பித்தான் உள்ளது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. பெரும்பான்மையான மக்கள் கிராமங்களில்தான் வசித்து வருகின்றனர்.
ஆனால் நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று 110 கோடி மக்களுக்கு வயிறார சாப்பிட உழைக்கும் விவசாயியின் நிலை மட்டும் ஏனோ அதலபாதாளத்தை நோக்கியே விரைந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த இழி நிலைக்குதான் காரணம் என்ன?
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனைச் செய்வோம், வீணே தினம் உண்டு கழிப்போரை நிந்தனைச் செய்வோம் என்று பாடினார் பாரதி.
இன்றைய திறந்த பொருளாதாரமும், தாராளமயமாக்கலும் கிராமத்து விவசாயி தனது காணி நிலத்தை விற்றுவிட்டு பெண்டு, பிள்ளைகளின் வயிற்றுப் பசியைப் போக்க பிறந்த மண், கலாச்சாரம், சொந்த பந்தங்களையெல்லாம் உதறிவிட்டு நகர்புறங்களுக்கு குடிப்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளான்.
தனக்கு இருக்கின்ற கொஞ்சுண்டு நிலத்தில் விவசாயம் செய்யக் கூட இன்றைய விலைவாசி அவனை அனுமதிக்க மறுக்கிறது. விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு விவசாயியின் ஆதாரத்தையே அசைத்து பார்க்கிறது. என்ன செய்வான் அவன், உள்ளூர் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்க நினைத்தாலே முதலிற்க்கே மோசம் ஏற்பட்ட பழைய வடுக்கள் அவன் கண்முன்னால் வந்து நிழலாடுகிறது.
ஆனாலும் வேறு வழித் தெரியாமல் கடன் வாங்கி செய்யும் தொழிலையும் சில நேரங்களில் இயற்கையின் சீற்றமும், பல நேரங்களில் நம்முடைய அரசியல்வாதிகளும் ரொம்பவும் அதிகமாக சோதிக்கின்றனர். ஒருபுறம் இயற்கையின் சீற்றத்தை தாக்கு பிடிக்க முடியாத விவசாயி, மறுபுறம் அரசு வங்கிகளில் வாங்கிய கடனைச் திருப்பி செலுத்த முடியாமல் தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் துர்பாக்கியமான முடிவைத் தேடும் அவலம்.
ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3,000-த்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்த பின்னர் தான் அரசு விவசாயிகளுக்கு துயர் துடைப்பு நிதியையும், வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சரி இனிமேலாவது விவசாயிகளின் துயரம் நீங்கிவிடும் என்று நாம் நினைத்தால் அது தவறு.
கடந்த நூறு ஆண்டுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் எல்லாச் சீர்திருத்தங்களும் வெறும் அலங்காரமாகத்தான் இருக்கின்றன, ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு உயர்சாதி மக்களுக்குச் சம்மந்தப்பட்டவையே மற்ற மக்களுக்கு ஒரு சிறிதும் சம்மந்தமானவை அல்ல என சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று தற்போதைய மக்கள் நலத் திட்டங்கள் உள்ளது தான் இந்த அவல நிலைக்கு காரணம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் சொன்னதைப் போன்று தான் தற்போதைய விவசாயம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களான தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம், வங்கிக் கடன் திட்டம், நவீன தொழில் நுட்ப பயன்பாடு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பிற சலுகைகளை முறைப்படுத்துதல் எல்லாமே ஒரு சிலர் பயனடையத் தக்க வகையிலேயே திட்டமிடப்படுகிறது. உழவுத் தொழிலில் இன்று ஈடுபட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள் கூலித் தொழிலாளிகளாகவே உள்ளனர்.
உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் முழக்கம் எல்லாம் வெறும் கூச்சல், கூப்பாடுகளாகவே தொடரும் நிலையில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் யாரைத் திருப்திபடுத்த ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. நாட்டின் 70 விழுக்காட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள், நகர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்க முடிகிறது.
இதற்கு காரணம் சூரிய உதயத்திற்கு முன் வயலுக்குச் சென்று, சூரியன் மறைந்த பின்னரும் உழைத்து உழைத்து ஓடாகிப்போன இந்த வர்க்கம் நம்மை என்ன கேள்வி கேட்கவாப் போகிறது என்ற அசாத்திய துணிச்சல்தானே. முந்தா நாள் பெய்த மழையிலே, நேற்று முளைச்ச காளானைப் போன்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவையாவது விவசாயத்துக்கு தர வேண்டாமா? அப்படித் தரத் தவறியவர்களை மக்கள் தற்போது ஆள அனுமதிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை எல்லாம் நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், சாலைகள்-மேம்பாலங்களாகவும் மாற்றினால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை உயருவதோடு, தட்டுப்பாடும் உருவாகும். உழவுத் தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலையை தரம் உயர்த்த முன்வராவிட்டால், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்நாடு மிகப்பெரிய சிக்கலை எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும். ஒரு நாட்டில் விவசாயத் துறையில் ஏற்படும் வளர்ச்சியைப் பொறுத்தே அந்நாட்டின் தொழில், சேவைத் துறைகளின் வளர்ச்சி அமையும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளும் எந்தவித முன்னேற்றமும் எதிர்பார்க்கும் பலனைத் தராது.
வானம் மும்மாறி பொழிந்து மூன்று போகம் விவசாயம் செய்தது அந்தக் காலம். அதனால் அப்போது நல்ல விளைச்சலைக் கொடுத்த இறைவனுக்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகள், கதிர் அறுக்கும் அரிவாள் உள்ளிட்டவைகளையும் உழவர்கள் வழிபட்டனர். ஆனால் இன்றோ நாட்டின் பெரும் பகுதிகளில் ஒருபோகம் விளைவதே பெரும்பாடாக உள்ள நிலையில் நம்முடைய உழவர் பெருநாள் என்ற பொங்கல் விழா ஒரு சடங்காகவே அமைகிறது.
உழவர் திருநாளில் சமூகத்தில் பெரும்பான்மையான நிலங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் ஒரு சிறு பகுதியினர் மகிழ்ச்சியாகவும், வயல்வெளிகளில் கூலிக்கு உழைக்கும் பெரும்பாலான விவசாயக் கூலித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கை சொல்லொண்ணாத் துயரத்திலும் உள்ளது என்பது தான் நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை.
தைத் திங்களை தமிழர் புத்தாண்டாக கொண்டாடப் போகிறோம் என்பதைக் கேட்ட போது கிடைத்த எல்லையற்ற மகிழ்ச்சி, அந்த விழா எதற்காக கொண்டாடப்படுகிறது என்று சிந்திக்க தொடங்கிய போது தொலைந்து போய்விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தையும் வழக்கம் போல் இதற்கு முன்பு வந்த தையைப் போன்று விவசாயிகளை துயரத்தில் திளைக்க விடாமல், இயற்கையும், அரசியல்வாதிகளும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் துறை செழிக்க பாடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்.
மலரவிருக்கும் தைப் புத்தாண்டில்
சாமானிய உழவனின் வாழ்வில்
ஓளியேற்றிட நாம் எல்லோரும்
இணைந்து செயல்பட உறுதியான
மனத்துடன் சபதம் ஏற்போம்.
உழவர்+ உழைப்பு+ உயர்வு = உன்னதமான நிலை
உழவரின் வாழ்வு உயரட்டும்!