’உன்னைப்போல வசந்தங்கள் வருவதில்லை’

லெனின் அகத்தியநாடன்

திங்கள், 28 செப்டம்பர் 2015 (15:02 IST)
’உன்னைப்போல வசந்தங்கள் வருவதில்லை’

ஒரு இலையுதிர்காலத்து மாலைப்பொழுதில்
அந்தப் பூங்காவின் மரங்களிலிருந்து
உதிர்ந்து விழுந்த
இலைகளைப் பார்த்தவாறு
கண்ணீரோடு நீ கூறிய வார்த்தைகள்
இன்னும் என் நினைவிலிருக்கின்றன....
 

 
“இலைகள் விழுவது
மரங்களின் மரணமல்ல,
அதுதான் அதன் வளர்ச்சி,
அதுதான் அதன் புத்துணர்ச்சி,
அதுமட்டும்தான் வருங்கால
வசந்தத்தின் அறிவிப்பு”
என்றெல்லாம் என்னிடம் கூறியது,
எனக்கு நம்பிக்கையை ஊட்டியது,
என்னை ஆசுவாசப்படுத்தியது
இன்னும் என் நினைவிலிருக்கின்றன....
 

 
இப்போது நீ என்னுடன் இல்லை
எங்கே இருக்கிறாய் என்பதும்
எனக்குத் தெரியாது...
 
வசந்த காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக
கடந்து சென்றுவிட்டது....
 
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
என்னிடமிருந்து அகலவில்லை..


 
ஏனெனில்,
ஆண்டுக்கு ஒருமுறை காலத்தின் வசந்தம்
வந்துசெல்வதைப் போல
 
அவ்வளவு எளிதாய்
வாழ்வின் வசந்தங்கள்
வந்துவிடுவதில்லை...
 
எப்போதாவதுதான் வருகின்றன
நீ என் வாழ்வில் வந்ததைப்போல...

வெப்துனியாவைப் படிக்கவும்