அம்மா நீ எங்கன இருக்கா?

கவிமகன்

செவ்வாய், 29 மார்ச் 2016 (20:09 IST)
எனே... அம்மா
எங்கன இருக்கிறா?
கையில் ஒரு பூக்கூடை
பையில் ஒரு படையல் என
முந்தி மாதம் தவறா
உன் விழி மழையின்
வீழ்ச்சியில் குளிப்பாட்டி
மகிழ்வித்து
முத்தம் தந்து குளிர்விப்பவளே
நீ எங்கன இருக்கிறா?



நன்றி: இளையராஜா
 
 
நீ அறிவியான நான்
சாகா வரம் பெற்றவன்
யார் சொன்னார் என்னை
இறந்ததென்று?
மண்ணின் சுவாசத்துக்காக
மண்ணில் வாசகம்
செய்கிறேன். சாவுக்குள்
கண்மூடி உறங்கி
உயிர்த்தெழுகிறேன்
திக்கெட்டும் தேடுகிறேன்
என் உயிர் உறவுகளின்
தாயை தேடும் ஓலம்
மட்டும் காதில் ஒலிக்கிறதே
உன்னை மட்டும் காணவில்லை
நீ எங்கன இருக்கிறா?
 
கைகள் மரத்து போய்
விறகு விற்று நீ ஊட்டிய
உப்பு கஞ்சி குடித்து
திடம் வளர்த்து
சேனை கொண்டு பகை
வென்று சாதனையோடு
ஈழ களம் வென்று சாகாது
மண்ணுக்குள் உயிரோடு
வாழ்கின்றேன்
இன்று உன் இருப்பின்றி
மனம் வெந்து கிடக்கிறேன்.
நீ எங்கன இருக்கிறா?
 
என் மனம் வலித்ததில்லை
விழுப்புண் பெற்று
வீழ்ந்த என் உடலில்
ரணங்கள் இல்லை
இதயத்தில் துடிப்பும் இல்லை
குருதி ஓட்டம் இல்லை
துடித்தெழும் உடல் நரம்புகள்
இயக்கம் இல்லை ஆனாலும்
நான் மடியவில்லை
துடிப்போடு மண்ணுக்குள்
இயங்கி கொண்டு இருக்கிறேன்
நான் செத்ததாக சொன்னது
வெறும் பொய்யன
வரி உடுத்தி வெறும் தூக்கத்திலே
கிடக்கிறேன்
உன் தாலாட்டுக்காக
காத்து கிடக்கிறேன்
அம்மா நீ எங்கன?
 
எனே அம்மா....
இப்ப கொஞ்சநாளா
தலை வலி...
இடர் மிகுந்த அமைதியின்மை
நீ தலை தூக்கி தாலாட்டு பாடிய
இடமெல்லாம்
கரிய இருட்டு சூழ்ந்து கிடக்கன
கால் மிதித்து தினம் நடக்கும்
பாதகர் பாதங்களால்
உடல் வலி நிமிர்ந்து கிடக்கன
என் உடல் தின்ற புழுக்கள்
கூட பயந்தொடுங்கி
மண்ணுக்குள் இத்து கொண்டிருக்கும்
எலும்பு மச்சங்களுக்குள் பதுங்கி
கிடக்கன..
 
என் உடல் மீதேறி நிக்கும் பன்றிகள்
கூட்டத்தின்
அவல சிகரம் சென்ற நிலையை
கண்டு எலும்புகள் கூட
ஒழிந்து கொள்ள இடம் தேடுதுன
இதுகளை போல நீயும்
ஒழிந்தான கிடக்கிறா?
 
எனே அம்மா எங்கன நீ
கொஞ்சம் வலி மருந்து தர
மறைந்திருந்து விம்மாது
என்னிடம் வா
உன் விழி நீரால்
குளிப்பாட்டி மடி இருத்தி
புன்னகை தந்திடன
மறைவில் இருந்து
வெளிவந்து மருந்து
தந்திடன...
 
நீ என்னை தேடிய காலங்கள்
கடந்து போச்சோ?
நான் உன்னை தேடும் காலம்
இதுவென்றாச்சோ
உன் மகன் வலிக்கு மருந்திட
வழியிருக்கோ
உன்னை அன்றி எனக்கு
வேறு மருந்துண்டோ....
அம்மா நீ எங்கன இருக்கா?

வெப்துனியாவைப் படிக்கவும்