நானும் ஒரு கதாநாயகிதாம்!

கோபால்தாசன்

புதன், 12 ஆகஸ்ட் 2015 (11:59 IST)
என் இளமையையும்
என் முகத்தையும் கண்டு
நடிகையென
கூறாதவர் எவருமில்லை.

எதிர்பாராதவிதமாய்
தந்தை ஒரு விபத்தில் இறப்பு.
இரண்டு தங்கைகளின் படிப்பு.
அம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி வேலை என
தத்தளிக்கும் சமயத்தில்.

சுமை அனைத்தும்
என் தலைக்கு வந்தது.

ஒருவரின்
நேர்மையான அணுகுமுறையும்
அவரின்
அன்பான வற்புறுத்தலுக்கும்
உடன்பட்டு

கதாநாயகிக் கனவை
கழற்றி வைத்துவிட்டு
கதாநாயகனுக்கு
தங்கை எனும் வேடத்தை ஏற்றுக்கொண்டது
வாழ்வை திசைமாற்றிவிட்டது...

இனியும்
நான் கதாநாயகியாவதற்கான
தகுதியுள்ளவளா எனச்
சோதித்துப் பார்க்க வேண்டும்...

கான்வென்டில் படித்திருப்பதால்
இங்கிலீஷ் பேசவும் எழுதவும்
ஓரளவு தெரியும்...

இதுதவிர

மூன்று மொழிகள் பேசுவேன் அது
தெலுங்கு, மலையாளம், இந்தி பட
சூட்டிங் நண்பர்களோடு
பேச பழக வந்தது...

எனது
வருவாய்க்கு இதுவும் ஒரு காரணம்.

திரைக்குப் பின்னால்
வேலை செய்பவர்களுக்கெல்லாம்
வயது – முகம் ஒரு
பொருட்டே அல்ல.

என்னைப் போன்றவர்க்குதாம்
வயதும் – அழகும் முக்கியம்.

இல்லையெனில்
தூக்கி வீசிவிடுவர்.

இந்த இளமை கரைவதற்குள்
துணை நடிகை எனும் பெயர்
கழன்று விழுவதற்குள்
என் குடும்பச் சுமையை
முதலில் நான் இறக்கியாக வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்