அந்த அதிகாலையில் பெயர் மட்டுமே பரிச்சயமான ஊரின் ரயில் நிலையத்தில் சிறு பையுடன் இறங்குகிறீர்கள். நிலையத்தின் மீதுள்ள துயிலகத்தில் களைப்பாறி உடைமாற்றிச் செல்லத் தீர்மானிக்கிறீர்கள். கருத்த ரோமானிய எண்கள் மீது முட்கள் படரும் பெரிய வட்டக் கடிகாரம் தொங்கும் மரப்படிகளில் ஏறி துயிலகப் பதிவு அலுவலகம் முன் நிற்கிறீர்கள் பிரசவ நெடியை நினைவூட்டும் வெற்றிலை வாடையுள்ள நீலச் சீருடை மூதாட்டி உங்களுக்கு எழுபத்தி ஐந்தாம் பிரிவை ஒதுக்கி அனுமதிச் சீட்டைத் தருகிறாள். உங்கள் முகவரியைப் பதிவு செய்ய கனத்த பழுப்பு நிறக் குறிப்பேட்டை உங்கள் முன் நகர்த்துகிறாள். நடுங்கும் கருத்த கோடுகளுக்கு நடுவே நீங்கள் ஒரு புதிராக முகவரியை எழுதுகிறீர்கள். காலிக் கட்டில்களால் உடைந்த விளக்குகளால் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளால் வராத ரயில்கள் மற்றம் வந்து சேராத பயணிகளால் நிரம்பிய அந்த ரயில் நிலையத்தின் துயிலகத்துள் நீங்கள் நுழைந்த போது ஜன்னல்வழி நீங்கள் பார்த்த(து) கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் மூடப்பட்ட பாதைகள் வழிகள் முயங்கிப் பலவாய் பிறழ்வுறும் தண்டவாளங்கள் வேறு அன்றைக்கு உதித்த சூரியன் வேறு.