பாவேந்தர் பாரதிதாசன் 120வது பிறந்தநாள் இன்று. 29.04.1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழ் ஆசியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதி மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிய எழுச்சிமிக்க எழுத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.
பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
தமிழே, உயிர் நீ, மறப்பேனா?
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே! வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போல செழித்தஎன் தமிழே ஒளியே வாழி
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்!
"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு வாழ்ந்தஎன் மற வேந்தர் பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர் புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன்!
கொட்டு முரசே!
உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல உண்மைத் தமிழர்கள் வாழ்வு! அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவி ஆளப் பிறந்தவன் தமிழன். உயர்வென்று கொட்டுக முரசே!
அயல் என்று கொட்டுக முரசே!-- உற வான திராவிடர் அல்லார்! துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம் தூள் என்று கொட்டுக முரசே! உயர்வென்று கொட்டுக முரசே!
அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும் ஆண்மை யில்லாதவர் வந்து நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம். உயர்வென்று கொட்டுக முரசே!
தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச் சகத்தில் முழக்கிடு முரசே! நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை நாற்றிசை முற்றும் முழக்கு! உயர்வென்று கொட்டுக முரசே!
ஒத்துண்ணல்!
இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரித்திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்துமில்லை; வேறுவேறு இருந்து அருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்கம் இல்லை!
பாரதியார்!
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா! காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்! திறம்பட வந்த மறவன், புதிய அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்! என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்! தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.