பட்சி ராஜா

திங்கள், 5 செப்டம்பர் 2011 (16:38 IST)
FILE
மரத்தின் உச்சியில்
மௌனச் சூழ்ச்சியில்
இமைகள் விரித்து
இறக்கைகள் மடித்துத் துயில்கின்றேன்.

உறங்கும் பொழுதிலும்
உள்மனக் கனவிலும்
வேட்டைச் சோதனை
வெற்றி ஒத்திகை பயில்கின்றேன்.

அலகும் நகமும்
இறகும் சிறகும்
குறி தவறாது
இரை தப்பாது வினைபுரியும்.

உயரும் மரமும்
ஒளியும் வளியும்
பார்த்திருப்பதற்கும்
பாய்ந்தடிப்பதற்கும் துணைபுரியும்

வெளியில் பறப்பினும்
கிளையில் இருப்பினும்
நோட்டம் தரையிலும்
நோக்கம் இரையிலும் பதிக்கின்றேன்.

வல்லான் உரிமையை
வயிற்றுக் கடமையை
ரத்த நீதியை
ராட்சச நியதியை விதிக்கின்றேன்.

வளர் மரம் வளர்ந்திடும்
ஒளிர்கதிர் ஒளிர்ந்திடும்
விரைவளி விரைந்திடும்
விழும்பலி விழிந்திடும் இனிமேலும்.

இதுவரை எவ்விதம்
என்றுமே அவ்விதம்
மாறும் பிறிதுமே
மாறேன் சிறிதுமே ஒருக்காலும்.

(Ted Hughes - "Hawk Roosting")
மொழிபெயர்ப்பு: நோயலஜோசபஇருதயராஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்