["பொதுவாக நடுத்தர வர்க்க வாழ்விற்கு இடம் பெயர்ந்துவிட்ட மனிதர்கள், தமக்குப் பழமை என்ற ஒன்றே கிடையாது போலவும் அதன் தாக்கம் எதுவுமே இப்போது இல்லை என்பதாகவும் பாசாங்குகள் செய்வது இயல்பு இந்தப் பாசாங்குகளை உடைத்து வெளிப்படையாகப் பேசுபவை மதிவண்ணனின் கவிதைகள் ஆகவே எதிர்மரபு சார்ந்த பல விஷயங்கள் பதிவு பெற்றுள்ளன" -- "நெரிந்து" கவிதை தொகுப்பு முன்னுரையில் எழுத்தாளர் பெருமாள் முருகன்.] ------------------------------------------ [1] ஆகப்போவத்தொன்றுமில்லை எல்லா எத்தனமும் வீணேயெனினும் முளையொன்றொடு பிணைத்துன் கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் வலிய சங்கிலியின் இரும்புக் கண்ணிகளைக் கடித்துக் கொண்டாவது இரு. ---------------------------------------
[2] பொட்டும் பொன்னும் துலங்க டிவி பெட்டிகளிலிருந்தும் அலங்கார மேடைகளிலிருந்தும் கண் சிமிட்டுகிறார்கள் ஸங்கீத, வாத்ய வித்வான்கள்.
ஆவ்சர், மேஸ்திரியின் அட்டூழியத்தை வாட்டசாட்டமான மாடு கேட்கப் புலம்பிக் கொண்டு சாக்கடை வண்டியடித்துப் போகும் ஆத்தியப்பண்ணனுக்குக் குடிசையின் வடக்கு மூலையில் கவனிப்பாரற்று தொங்கும் காவித் துணி மூடிய உறுமியை நினைத்துப் பார்க்கவும் எழுத்தில்லை. -------------------------------------------------------------
[3]
தேடித் தேடிப்பார்த்தாலும் இந்த நிமிடம் நீடிப்பதற்கு எந்த நியாயமும் இருக்கவில்லையென்றாலும் ஒண்ணான் தேதியைத் தேடி ஓடாமலில்லை நீயும் நானும் விரையறுத்துச் சாம்பல் தடவிய பன்றிக்குட்டி சாயங்காலமே கஞ்சித் தொட்டிக்கு உறுமிக் கொண்டோடி வருவதைப் போல் சொரணையில்லாமல்.