நத்தையும் சிங்கமும் - ஸ்ரீநேசன்

புதன், 7 செப்டம்பர் 2011 (16:50 IST)
ஒரு சிங்கத்தைப் போல கர்ஜித்தவாறு
ஏதோவொன்று சமீபத்தில் நமக்கிடையே நுழைந்தது
சிங்கம்தானா என கவனித்தால் அது சந்தேகமாக இருக்கிறது
பின்பு அதுவே ஒரு நத்தையைப் போல் வெளியேறுகிறது
இப்போது சிங்கத்தின் கர்ஜனையும் இல்லை
நத்தை வெளியேறியதற்கான ஈரத்தடயமும் இல்லை
ஆயினும் அதனை நாம் நத்தையெனவே நம்புவோம்
அச்சப்படத் தேவையில்லை ஏனெனில் அது மிக சாதுவானது
நிதானமானது மென்மையானது
அறியாது நம் கால்பட்டு நசுங்கினாலும்
சிறு எதிர்ப்பும் காட்டாமல் சாகக்கூடியது
சிங்கத்தால் அறியமுடியாத பலவற்றை அறியும்
உண்ர்கொம்புகளும் உள்ளன
ஆனால் இங்கு நடந்ததோ வேறு
வெளியேறிய நத்தை திடீரெனத் திரும்பி
என்னைப் பார்த்து
சிங்கத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரத்தோடு கர்ஜிதது
அதனால் நாம் கூடியிருக்க வேண்டிய தருணம்
வந்துவிட்டது
நத்தையே ஆயினும் அதற்குள்ளிருக்கும்
சிங்கத்தைக்
கூட்டாகச் சேர்ந்து கொல்வோம்
எவ்விதமான பலாபலன் ஏற்பட்டாலும் பரவாயில்லை
ஏனெனில் இப்போதைய சிங்கத்தைக் கொல்லாமல் விட்டால்
என்றேனும் நாம் ஒருநாள் நத்தையால் கொல்லப்பட நேரலாம்.

நன்றி: பவளக்கொடி
நவம்பர் -டிசம்பர் - 2007

வெப்துனியாவைப் படிக்கவும்