கொடி வணக்கம் செய்...!

செவ்வாய், 12 ஜனவரி 2010 (19:53 IST)
இந்துவாய் இரு...
கிறிஸ்தவனாய் இரு...
முஸ்லிமாய் இரு...
மனிதனாய் இருந்தால்தான்
மன்னிக்கமாட்டார்கள்!

அடிமையாய் இரு...
அகதியாய் இரு...
உரிமையோடிருப்பேன் என்று
அடம்பிடிக்காதே!
வவுனியா முகாமில் இடம் பிடிக்காதே!

தமிழே பேசு...
தமிழ்த்தாய் வாழ்த்து...
தமிழனைப் பற்றி மட்டும்
மூச்சு விடாதே!

ஆயுதம் தாங்கு...
பேரிடு...
செத்துமடி...
அப்போதுதான்
நீ தேசபக்தன்

சமாதானம் பற்றி
இப்போது பேசாதே...
நீ செத்து மடிந்தபின்
நாங்கள் பேசிக் கொள்கிறோம்!

விவசாயத்துக்கு மானியமா...
பொதுத்துறைக்கு ஊதியமா...
அவசரப்படாதே!
எங்களுக்கு
ஆயுதம் வாங்கவே அவகாசம் இல்லை!

அழுது புலம்புவதில் அர்த்தமில்லை...
உன் தேசம் இன்று வல்லரசு...
பெருமைப்படு!
அணுகுண்டு இருக்கிறது
ஏவுகணை இருக்கிறது
நீர்மூழ்கி இருக்கிறது
உளவு விமானம் இருக்கிறது...
உன் தேசமும் இன்று வல்லரசு...
பெருமைப்படு!

கோக் கிடைக்கிறது...
பெப்ஸி கிடைக்கிறது...
காவிரி நீர் பற்றி ஏன்
கவலைப்படுகிறாய்!

வேலை கொடு
வேலை கொடு
என்ற அபஸ்வரம் எதற்கு?
அடிக்கடி வருகிறது இடைத்தேர்தல்...
கொடி ஏந்து - நூறு ரூபாய்!
கோஷம் போடு - இருநூறு ரூபாய்!
ஆரத்தி எடு - ஐநூறு ரூபாய்!
ஓட்டுப் போடு - ஆயிரம் ரூபாய்!
கள்ள ஓட்டு போடு -
இரண்டாயிரம் ரூபாய்!

கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்து!
அரசியல் அனுபவத்தை அதிகப்படுத்து!
புத்தி சாதுர்யம் இருந்தால்
அடுத்த தேர்தலில்
நீயே நிற்கலாம்!

உன்னிடமிழந்தும் நாடு
அரசியல் கற்கலாம்!
கேட்பதற்கே பெருமையாய் இல்லையா?
பிறகெதற்கு
வயிற்றுப் பசி என்று
சுருண்டு கிடக்கிறாய்?

பிறவிக் கடனை மறந்து ஒரு நொடி
கொடிமரம் போல நிமிர்ந்து நில்...
தேசியக் கொடி பறக்கும்
திசை நோக்கித் திரும்பு...
காற்றில் பறக்கும் கொடியை வணங்கு...
அதற்குள்ளாக நீ
அறுந்து விழுந்தால்
உன் தேசபக்திக்கு
விருது கிடைக்கலாம்

கொடியை வணங்க
நிமிர்ந்த தியாகிகளின்
நீண்ட வரிசையில்
உன் பெயர் நிலைக்கலாம்!
பாரத்மாதா கீ ஜே...!

வெப்துனியாவைப் படிக்கவும்