ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன் இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப்போல் யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன்! பேரன்பே! என் இறைவா! பிறிதெங்கு சென்றாய் நீ?
செப்பமுள் நூலறுந்து சிதைந்ததுபோல் இருந்ததுளம்; பொங்குமொளி வெய்யிலிலும் பொழியும் மழைதனிலும் கங்கைக் கரையதனில் கால்நீட்டி நான்படுத்தேன்; எரிகின்ற கண்ணீரால் எழுந்த துகள் நான் அடக்கி
அழுதோலம் இட்டேன்யான் ஆர்ப்பரிக்கும் கங்கையுடன் இருக்கும் நிலம் யாவும் எச்சமயக் கோட்பாடும் உரைக்கும் பெயர்களினால் உனைக்கூவி நான் அழைத்தேன், உயர்ந்தவர்கள் குறிக்கோளை உற்ற வழியதனைத்
தயவோடு நீ எனக்குச் சற்றே தெரியவுரை! என்றன் அலறலுக்கும் ஏங்கொலிக்கும் மத்தியிலே நின்றொருவன் எனைக்கூவும் நிலைதெரியும் நாள்வரையில் கணங்கள் யுகங்களெனக் காட்சிதர, துன்பத்தின்
உணர்வு பெரிதலற ஓடியன பல்லாண்டு. `என் மகனே, என் மகனே' என்று மிக மேலான மென்மைக் குரல் எழுந்து வேதனையை ஆற்றியது, என்றனுயிர் நரம்பெல்லாம் இணைந்திசைக்கும் இசையதனில் நன்றுவரும் சிலிர்ப்பாக நற்காட்சி தந்தது! எந்த இடத்திருந்து எழுந்ததந்தக் குரல் என்று கண்டு கொளமுயன்று கால்ஊன்றி நான் நின்றேன். எனைச்சுற்றி, என் முன்னே, என் பின்னே அதைக்காண
முனைப்போடு நான்நோக்கி முயன்றுமிகத் தேடி நின்றேன். மறுபடியும் மறுபடியும் மாண்புடய குரலதுவோ உரையாடி நின்றதுபோல் உளத்தினிலே தோன்றியது. ஆனந்த வெள்ளத்தில் ஆன்மா அமைதியுற்று
என் அன்பே! என் அன்பே! இங்கேதான் நீ உள்ளாய்! இங்கேயே உள்ளாய் நீ; என் அன்பாய், எல்லாமாய்! உன்றனையான் தேடிநின்றேன் ஒருநாளும் இறவாமல் நின்று நிலைத்திருந்த நேர்த்திப் பொருள்களிலே
பெருமிதத்தில் முடிபுனைந்து பெருமையுடன் இருந்தாய் நீ அந்தநல்ல நாள்முதலாய் அலையும் இடங்கள் எலாம் வந்தருகில் இறைநிற்கும் வண்ணத்தை நான் உணர்ந்தேன். மேடதனில், பள்ளத்தில் மிக உயர்ந்த மலைமுகட்டில்,
அவன் அழகும் ஆற்றலதும் ஒளியின்ஒளி ஆனவையே! புவனஎழில் இயற்கையதில், பொங்குபெருங் கடலதனில், மேன்மைமிகு காலைதனில், மெலிந்துருகும் மாலைதனில் வான்பறவைத் தேனிசையில் வள்ளலினைக் கண்டு கொண்டேன்.
பெருந்துயரம் பற்றிப் பிடிக்கையிலே என் இதயம் வருந்தி மயக்கமுற்று வலிமை இழக்கிறது. என்றும் வளையாமல் இயங்கும் விதிமுறையால் நன்றாய் எனையழுத்தி நசிக்கும் உலகியற்கை, தாலாட்டித் தூங்கவைக்கும் தாயின் மடித்தலத்தின் மேலாக நீ நின்று மென்குரலில் பேசுகிறாய், துள்ளி விளையாடிச் சூதின்றி நகைசிந்தும் பிள்ளைகளின் பக்கத்தில் பிரியமுடன் நிற்கின்றாய்
மூத்த முனிவருடன் முதல்வன்நீ சென்றுவிட்டாய். பூத்துவரும் கோட்பாடு புறப்படுவ துன்னிடமே மறைகளுடன் பைபிளதும் மாண்புடைய குரானும் இறைவன் உனைத் தெளிவாக இசைத்து மகிழ்ந்திருக்கும்.
விரைகின்ற வாழ்க்கை வியன்புனலில் ஈசன்நீ நிறைந் தொளிரும் ஆன்மாவின் ஆன்மாவாய் நிற்கின்றாய், உன்னவன்நான் உன்னவன்நான் உண்மையில் நீ என் இறைவன் என் அன்பே, இயம்புகிறேன் ஓம் தத் ஸத், ஓம் தத் ஸத்.