எல்லாளன் எழுவான்!

புதன், 1 ஜூலை 2009 (20:16 IST)
webdunia photoWD
எலியினைச் சாய்த்துப் புலியெனக் காட்டிய
எட்டுக்கால் பூச்சியே! போர்ப்படை நடத்திடும்
எல்லாளன் தன்னைப் பிடிக்கா(து) எவனையோ
எரித்துச் சாம்பலைக் கரைத்திட்ட ஈனனே!

வந்தேறி சொற்படி ஊடக வழியாய்ப்
பலியான தாய்ப்பொய் பகன்றபுன் காடையே!
பகலவன் ஆற்றல் அறியா ஆண்டையே!
பன்முறை இறந்ததாய்ப் பகன்றாய்! தோன்றினான்

பன்முறை அவன்உன் படையை அடக்க
பரிதியாய் எழுந்தான் போர்முனை வென்றான்
கத்தும்உன் குரல்வளை நெறிக்க நாளைக்
கனன்றெரி தழலாய்க் கொழும்பு நடுவில்

எத்தரைப் புதைக்க எம்மின மக்கனை
ஈன்ற தாயெனக் காக்க வருவான்
புத்தன் காலடி உன்னைப் புதைக்கப்
புதிய புயலாய்ப் பொங்கிப் புலர்வான்

உலகெலாம் பரவியே உலவரும் புலிகள்
உயிர்த்தெழுந்த தனரே உயர்தமிழ் இனம்பால்
கலகம்செய் தோர்கள் கல்லறை நாடிக்
கால்கடுத்(து) ஓடிப் படுத்தே விட்டனர்

விலங்குகள் தூளாய் வீழும் விடுதலை
விழாக்கோலம் பூண்டு ஈழமாய் எழும்
துலங்கும்நம் நாடு புடவியின் முடிமேல்
தும்பை மலரெனச் சுடர்ந்தொளி வீசும்

பாவலர் ஏற்றி எண்ணமும்: புரட்சிப்
பாவேந்தர் பின்னிய சொல்லும் வெல்லும்
ஏவலர் மறைவர் ஏய்த்தவர் ஒழிவர்
ஏக்கங்கள் குறைந்து நம்மினம் செல்லும்

பாவலர் பரணி பாடிட தமிழ்மறப்
பாவையர் மாலைகள் சூட்டிடத் தலைவன்
கோ வென நகர்வலம் வருவான்: தமிழரைக்
கோபுர மாக்குவான் குறைகளைக் களைந்தே

- பர‌ணி‌ப்பாவல‌ன்

வெப்துனியாவைப் படிக்கவும்