உறவின் அடையாளங்கள்

வியாழன், 11 மார்ச் 2010 (13:58 IST)
ஆகமொத்தம் அந்தப் பெட்டிக்குள் இருந்தது
ஐந்து நிழற்படங்கள்

தாத்தாவின் படம்
முழங்கைக்கும் மேல் சட்டையை மடித்தபடி
நண்பனோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று
(பிராயத்துல அழகுதான்)

ரீத்தம்மாளோடு சேர்ந்து எடுத்தது
(அண்ணனின் துபாய் நண்பன் எடுத்து அனுப்பியது)

அடுத்தது பளிச்சென்று சிரித்தபடி பிச்சை சித்தப்பா

சட்டமிடப்பட்ட இந்த நிழற்படங்களுக்குள்தான்
அப்பாவின் எல்லைகள் அடக்கம்

இன்னும் பெட்டியின் கீழே துழாவிய கைகளுக்குள்
தட்டுப்பட்டவை
நலம் நாடி அன்றுநான் அனுப்பிய மடல் ஒன்று

திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பற்றிய குறிப்புகள்

காப்பிநிற ஜிப்பா

உடுத்தாத கோடி சட்டை
(போன கிறிஸ்துமசுக்கு எடுத்தது)

மடக்கி வைத்த காகித உறைகள்

அருள் அண்ணன் அனுப்பிய
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை

நெல் அளக்கும்போது பயன்படுத்திய
இரண்டு மடிச்சில்களும்
பழைய அணாக்களும்

இன்னும்
ஆழ துருவியதில்
கிடைத்த அந்த பைக்குள் இருந்தாள்
அம்மா (மறைவு பிப்ரவரி 11 1997)

உடைந்த கண்ணாடி (மாமாவின் பரிசு)
உறைநிலை எண்ணெய் பிசுக்குடன் திரிப்பான் முடி
சிந்திக் கிடந்த சிவப்புமல்லி கண்டாங்கி
அத்துடன் சாம்பல் நிறச்சட்டை

அம்மாவின் நினைவாய் அப்பாவும்
இருவரின் நினைப்பாய் நாங்களும்
தொட்டுப்படர்கிறது
குருதி வழி உறவு

வெப்துனியாவைப் படிக்கவும்