இலக்கியம் பரவுதற்கு இணையத்தைப் பயன்படுத்தவேண்டும்

திங்கள், 9 மே 2011 (16:50 IST)
பாவலர் முல்லைவாணன் கவிதைகள் பற்றிய ஆய்வுரையில் பேராசிரியர் மறைமலை வேண்டுகோள்

சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் திங்கள்தோறும் ஒரு பாவலரைப் பற்றிய ஆய்வுரைத் தொடரைக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறது. ‘வாழும் தமிழ்க் கவிஞர்களஎனும் இத்தொடர்பொழிவு மூலம் பேராசிரியர் மறைமலை பாரதிதாசன் மரபுப் பாவலர்களைப் பற்றிய தம் ஆய்வுரைகளை வழங்கி வருகிறார்.
FILE

ே 3ஆம் நாள் சிங்கைப் பாவலர் முல்லைவாணன் கவிதைகளைக் குறித்த ஆய்வுரையை வழங்கினார். இப் பொழிவுக்குப் புலவர் கி.த.பச்சையப்பன் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமையுரையில் முல்லைவாணன் பிறமொழிச்சொல் கலவாமல் தனித் தமிழ்க் கவிதைகளைப் படைத்துவரும் திறத்தைப் பாராட்டினார்.

முன்னதாகத் தமது வரவேற்புரையில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றச் செயலாளர் அனைவரையும் வரவேற்றார். பொழிவாளர் பேராசிரியர் மறைமலை இணையத்தின் மூலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருவதையும் ‘செம்மொழிச்சுடரஎன்னும் பெயரில் இணைய இதழ் நடத்திவருவதையும் செயலாளர் பக்தவத்சலம் தமது வரவேற்புரையில் கூறினார். விழாத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் பாவலர் முல்லைவாணன் தமிழியக்கப் போர்க்களங்களில் ஈடுபட்டதையும் அதன் விளைவாக அவர் பெற்ற துன்பங்களையும் எடுத்துரைத்தார். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழ் வளரப் பெரிதும் உழைத்த முல்லைவாணன் தலைசிறந்த பாவலராகவும் விளங்கும் சிறப்பினைப் புலவர் கி.த.ப.விரிவாக உரைத்தார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமது ஆய்வுரையில் முல்லைவாணன், மலர்களை அடுக்கியுரைத்த கபிலர் போன்றே முல்லைவாணனும் பல்வேறு மலர்களையும் பயிரினங்களையும் உவமைகளாகத் தமது கவிதைகளில் இடம்பெறச் செய்துள்ளமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். முல்லைவாணன் படைத்த நீண்ட கவிதைகளைப் படிக்க நேரமில்லாதவர்கள் ஒன்றிரண்டு அடிகளைப் படித்தாலும் கவிநயம் அவர்கள் நெஞ்சைக் கவரும் என்றார் மறைமலை.

“திங்களா? ...தீஙகள” என்னும் இரு சொற்கள் கொண்ட ஒரே அடியே நயமிக்க கவிதையாக விளங்குகிறது எனப் பாராட்டிய பேராசிரியர் மறைமலை, இணையத்தில் முல்லைவாணன் பெயரில் தேடுபொறியில் ஆய்ந்தால் அவரது அருமை பெருமைகளைக் கூறும் பல எழுத்துரைகளைக் காணலாமெனவும் அவ்வாறு தாம் கண்ட சில சுவைமிக மேற்கோள்களையும் உரைத்தார். தமிழ்ப்பேராசிரியர்களும் பாவலர்களும் இலக்கியத்தைப் பரப்புதற்கு இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முப்பத்தாறு கவிஞர்களுக்கு வலைப்பூக்கள் அமைத்துள்ளார் பேராசிரியர் மறைமலை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

பட்டிமன்ற இணைச் செயலர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி நன்றி கூற விழா இனிது முடிந்தது.

பாவலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என அவை நிறைந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்