கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

webdunia photoWD
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர்.

புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 19-ம் தேதி (திங்கட்கிழமை ) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

பு‌‌த்த பூ‌ர்‌ணிமா வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள் அனு‌ப்ப!

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.


துறவறம் :

webdunia photoWD
உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

webdunia photoWD
1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிவரணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.