திருப்பாவை இரண்டு பாடல்களும் விளக்கமும்

திங்கள், 26 டிசம்பர் 2011 (12:11 IST)
பாடல் 1:

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் ; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பொருள் :

பொழுதுவிடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல்.

கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார். நோன்பிற்காக நீராடக்கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு. குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், "ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டியதிருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே" என்று சுவாமி இரங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா.

பாடல் 2:

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய் ;

மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

`மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள் :

எழுந்திருக்காத பெண்ணை எழுப்பச் சொல்லி, அவள் தாயாரிடம் வேண்டுவதாக அமைந்த பாடல்.

மாமன் பெண்ணே! தூய்மையான மணிகள் இழைத்துச் செய்யப்பட்ட மாடத்தில், படுக்கையைச் சுற்றிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, அகில் முதலியவைகள் (தூப) வாசனை கமழ, படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றாயே? எழுந்திரு. மணிகளாலாகிய உன் வீட்டுக் கதவைத்திற. (அவள் எழுந்திருக்கவில்லை. அதனால் அவளருகில் இருந்த அவள் தாயாரை அழைத்துச் சொல்கிறார்கள்) மாமீ! உங்கள் பெண்ணை எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? அல்லது சோம்பேறித்தனமா? ஆச்சரியமான செயல்களைக் கொண்டவன், திருமகள் கணவன், வைகுண்டநாதன்-என்று பெருமாளின் பலவிதமான திருநாமங்களையும், நாங்கள் சொல்வதால் அதைக் கேட்டுப் பரவசப்பட்டு இப்படி இருக்கிறாளா? அவளை எழுப்ப மாட்டீர்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்