ஈஷாவும் நானும்: எழுத்தாளர் வண்ணதாசன்

புதன், 20 ஜூன் 2012 (13:23 IST)
FILE
"சத்குருவின் கண்களை எனக்குப் பிடிக்கும்… சலசலக்கிற நதியின் ஊடே தெரிகிற கூழாங்கல் குளிர்ச்சி உடையவை அவை..." - மலரினும் மெல்லிய வார்த்தைகளை பதியமிட்டு, மணம் வீசும் மனச்சித்திரங்களை மலரச் செய்யும் எழுத்தாளர் வண்ணதாசன் @ கவிஞர் கல்யாண்ஜியின் மென்மொழிவில் விரிகிறது இந்த வார 'ஈஷாவும் நானும்'...

இசையின் உச்சம் என்பது இசையைத் தாண்டுவதுதான்!

தியானலிங்கம், அமைதியின் தடாகத்தில் ஒரு மகா மொக்குப் போல மௌனத்தின் ஒற்றைக் காம்பில் வான் நோக்கியது. நாத ஆராதனை மொத்தமாகத் துவங்கி, தனித்தனியாகவே நிறைகிறது ஒவ்வொருவரிடமும். நான் நிறைந்தபோது என் பார்வையில் தியானலிங்க உச்சியில் இருந்து தரை வரை தொங்கிய மாலையின் கடைசி கொத்து புரண்டபடி. நான் யாரையும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. எல்லோருமே அப்படித்தான் இருந்திருக்க முடியும், இருந்தார்கள்.

தியானலிங்க மண்டபத்தில் இருந்து வெளி வருகையில், ஒரு கல் தொட்டி. அதில் சின்னஞ்சிறிய நீல அல்லி ஒன்று எனக்காக மலர்ந்திருந்தது. அல்லது நானேதான் அது!

'வாய்ப்பிருந்தால் நான்கு மணிக்கு சத்குருவை சந்திக்கலாம்' - மரபின் மைந்தன் எங்களிடம் சொன்னார். கோடிட்ட இடங்களை நிரப்புவதில் மனிதர்கள் அடைகிற உற்சாகம் எவ்வளவு என்று அவருக்குத் தெரியும். அந்த நொடிக்கும் நான்கு மணிக்கும் இடைவெளியில் ஓர் அசையும் புல் என மனம் உடனடியாகத் துளிர்த்துவிட்டது. அப்புறம் எதிலுமே ஒரு புல் அசைவுதான் என்னிடம்.

கட்டுமானங்கள், தூரத்து நீல மலை விளிம்பு, தீர்த்த குளம், சத்சங்க சபையில் ஓவியர் ராஜத்தின் இந்தத் தலைமுறை விரல்களால் வரையப்பட்ட அற்புத ஓவியங்கள், தரையின் கல் தளங்களில் நெளிந்து கொண்டு இருந்த நாகச் செதுக்கல்கள் எல்லாவற்றிலும் என் புல் இதழ் அசைவுகள்.

சத்குருவின் செல்லக் குழந்தையான அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில்தான் நான் மீண்டும் மனிதன் ஆனேன். மிகுந்த அர்ப்பணிப்பு நிறைந்த மஞ்சு அவர்களின் அழைப்புக்கு இணங்கி, இரண்டு மாணவர்கள் சொன்ன கவிதைகள் எங்களையே வரிகளாக்கிக்கொண்டன. அதுவும் அந்த "மறந்து போன பாடல்", மறக்க முடியாதது ஆயிற்று. மலர்களின் மொழி, வெட்டுக்கிளியின் சொல், நட்சத்திரங்களின் உரையாடல், விழுகின்ற பனியின் விம்மல் என்று மறந்து போன பாடலின் பட்டியலை அந்தச் சிறுவன் முடித்தவுடன் அவனை அப்படியே கட்டிக்கொண்டேன். இவ்வளவு தூரம் வந்தது எல்லாம் அப்படி அந்தப் பையனைக் கட்டியணைத்துக் கொள்ளத்தான் என்று தோன்றியது.

நான்கு மணி, நான்கு மணிக்கே வந்தது.

சத்குரு எந்த இடைவெளியையும் உண்டாக்காதபடி, அவருடைய குடிலில் அமர்ந்திருந்தார். மிக எளிய வெள்ளை உடை மேலும் அவரை அணுகும்படியாக வைத்திருந்தது. நான் தியானலிங்கத்தை நினைத்துக்கொண்டேன். அந்த நீல அல்லியை, மறந்து போன பாடலைச் சொன்ன அந்தச் சிறுவனை, வெவ்வேறு இடங்களில் நெளிந்த வெவ்வேறு கல் நாகங்களை, அந்தப் பதஞ்சலி முனிவர் முகத்தை நினைத்துக்கொண்டேன். என் சட்டைப் பையில் நான் பொறுக்கி வைத்திருந்த குன்றிமணிகள் கிடந்தன. அத்தனை குன்றிமணிகளையும் அவருக்குக் கொடுக்க வேண்டும் போலத் தோன்றியது.

முத்தையா எங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தி வைத்தார். ஒவ்வொருவரைப் பார்த்தும் அவருடைய ஒரு சிரிப்பு கை குலுக்கிக்கொண்டு வந்தது. அவர் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். என்னுடைய அறிமுகம் நிகழ்வதற்குள் அல்லது நிகழும்போது அவர் கண்களை நான் பார்க்க விரும்பினேன். அவர் கண்களை எனக்குப் பிடிக்கும். புல்லாங்குழல் ஊதுகிற ஒரு மேய்ப்பனின் மகிழ்ச்சி, கோலாட்டம் ஆடுகிற பெண்ணின் கொண்டாட்டம், சலசலக்கிற நதியின் ஊடே தெரிகிற கூழாங்கல் குளிர்ச்சி உடையவை அவை.

"சத்குரு உங்கள் கண்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்ற என் விருப்பத்தைச் சொன்னேன். நான் சொல்லும்போதே சிரித்தார். சிரிப்பு முடிந்த இடத்திலிருந்து அவருடைய கண்களின் உரையாடல் துவங்கியது. மிகச் சிறிய பொழுதில், ஒரு பறவையின் குரல் பறந்த பிறகும் கேட்பது போல, அவர் உரையாடல் முடிந்தது.

நாங்கள் அவரைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்தோம். எந்த வேண்டுதலும் அற்று நானும் அவர் பாதம் தொட்டு வணங்கினேன். ஒவ்வொருவருக்கும் சத்குரு ஒரு நீல நிற மலரை அளித்தார்.

"இந்த மலரின் பெயர் தெரியுமா?" என்று கேட்டு, “கிருஷ்ண காந்தம்”என்று அவரே சொன்னார். நான் கிருஷ்ண காந்தத்தைப் பார்த்தேன். இன்னொரு நிற நாகலிங்கப் பூவாக அது இருந்தது. எங்கும் நாகம். எங்கும் லிங்கம் தியானலிங்கம்.

கிருஷ்ண காந்த மலரை, அதன் நடுவில் இருந்த லிங்கத்தைப் பார்த்துக் கொண்டு நின்றேன். தியானலிங்கத்துக்கான நாத ஆராதனையின் முதலில் ஒலித்த கிண்கிணி மீண்டும் அதிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது.

மீண்டும் எனக்கு முதுகு சொடுக்கியது.

ஈஷா மையத்தின் பெருவெளியில் இன்னொரு அசையும் புல்லினுடையது அது!

வெப்துனியாவைப் படிக்கவும்