நாளை சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாததால், பழனி முருகன் கோவிலில் நாளை வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள் முக்கியத்துவம் பெற்றவை. குறிப்பாக சூரிய கிரகணத்தின்போது கோவில்களில் நடை சாத்தப்படும். இந்நிலையில், நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம் மாலை 4.17 மணி வரை நீடிக்கும்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாத காரணத்தால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் எந்தவிதமான சிறப்பு அனுஷ்டானமும் செய்யப்படாது. எனவே வழக்கம்போல் 6 கால பூஜைகள் நடைபெறுவதாகவும், பக்தர்கள் வழிபாடில் கலந்துகொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது, பழனி முருகன் கோவிலின் அனைத்து சன்னதிகளும் மூடப்பட்டு, கிரகண பரிகார பூஜைகள் முடிந்த பிறகே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.