அதிமனத்தை நாடுவதன் நோக்கம்

சனி, 18 செப்டம்பர் 2010 (17:56 IST)
FILE
இந்த அகங்கார முறைகளில் என்னுடைய பிராணன் செயல்படவில்லை. நான் ஒர் உயர் உண்மையை நாடுகிறேன், அது மனிதர்களை பெரியவர்கள் ஆக்குமா, ஆக்காதா என்பதல்ல கேள்வி. அது அவர்களை உண்மையிலும், சாந்தியிலும், ஒளியிலும் வாழ்ச் செய்யுமா, வாழ்க்கையை இப்போதுள்ளதுபோல் அஞ்ஞானத்துடனும் பொய்மையுடனும், வேதனையுடனும், பூசலுடனும் நடத்தும் போராட்டமாக இல்லாமல் அதைவிட நல்ல ஒன்றாகச் செய்யுமா என்பதுதான் கேள்வி. அப்படிச் செய்தால், அவர்கள் கடந்தால மனிதர்கள் அளவிற்குப் பெரியவர்களாக இல்லாவிட்டாலும், எனது நோக்கம் நிறைவேறியதாகும். மனக் கருத்துக்களே எல்லாவிற்றின் முடிவாகும் என்று நான் கருதவில்லை. அதிமனம் ஒரு உண்மை என்பதை நான் அறிந்துள்ளேன்.

என்னுடைய சொந்தப் பெருமைக்காக நான் அதிமனத்தைக் கீழே கொண்டுவர விரும்பவில்லை. மனிதர்கள் சொல்லும் பெருமையோ, சிறுமையோ பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஓர் அக உண்மை, ஒளி, இசைவு, சாந்தி ஆகியவற்றின் தத்துவத்தை புவி உணர்வினுள் கொண்டுவர நான் முயன்றுக் கொண்டிருக்கின்றேன; அது மேலே இருப்பதை நான் பார்க்கிறேன், அது எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும் - அது மேலேயிருந்து என் உணர்வின் மீது அதன் ஒளிக்கதிர்களை அனுப்புவதை உணர்கிறேன், எனது ஜீவனில் பாதி ஒளியும் பாதி இருளுமான மனித இயல்பே இன்னும் தொடராமல் முழு ஜீவனையும் அதற்கே உரிய ஆற்றலுக்குள் எடுத்துக் கொள்வதைச் சாத்தியமாக்க முயல்கிறேன். இந்த உண்மை இறங்கி இங்கே தெய்வீக வாழ்க்கை மலர்வதற்கு வழி ஏற்படுத்துவதே புவிப் பரிணாமத்தின் இறுதி நோக்கம் என்று நம்புகிறேன். என்னைவிடப் பெரிய மனிதர்கள் இந்த வழியில் நினைக்கவில்லை, இந்த இலட்சியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் நான் என்னுடைய உண்மை - உணர்வையும் உண்மைக் காட்சியையும் பின்பற்றாமலிருக்க வேண்டியதில்லை. கிருஷ்ணன் செய்ய முயலாததை நான் செய்ய முயல்வதற்காக மனிதனின் பகுத்தறிவு என்னை ஒரு முட்டாளாகக் கருதினால் அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இதில் அவருக்கோ அல்லது மற்றொருவருக்கோ இடமில்லை. இது இறைவனுக்கும் எனக்குமிடையிலான விடயம் - அது இறைவனின் சித்தமா இல்லையா, நான் அதைக் கீழே கொண்டுவர அல்லது அதன் இறக்கத்திற்கு வழி திறக்க அல்லது குறைந்தபட்சமாக அதை அதிக சாத்தியமாக்க அனுப்பப்பட்டிருக்கிறேனா என்பதே கேள்வி. என்னுடைய இறுமாப்பிற்காக வேண்டுமானால் எல்லா மனிதர்களும் என்னை கேலி செய்யட்டும் அல்லது நரகமே என் தலையில் விழட்டும் - நான் வெற்றி காணும்வரை அல்லது அழிந்தொழியும்வரை தொடர்ந்து முயல்வேன். இந்த மன நிலையுடன்தான் நான் அதிமனத்தை நாடுகிறேன், என்னுடைய பெருமைக்காகவோ மற்றவர்களுடைய பெருமைக்காகவோ நான் தேடியலையவில்லை.

(பிப்ரவரி 02, 1935)

அதிமன மாற்றத்திற்கான நிபந்தனைகள்

நான் அதிமனத்தை நாடுகிறேன் என்றால் அது புவி உணர்விற்காகச் செய்யப்ட வேண்டிய ஒன்று, அது என்னிடத்தில் செய்யப்படவில்லையென்றால் பிறரிடத்தில் அதைச் செய்ய முடியாது. என்னுடைய அதிமன மாற்றம் அதிமனத்தின் கதவுகளை புவி உணர்விற்குத் திறப்பதற்கான ஒரு திறவுகோல் மட்டும; அதற்காக மட்டுமே செய்யப்பட்டால் அது முற்றிலும் பயன்றற ஒன்றாகும். அப்படியென்றால் நான் அதிமனமாற்றமடைந்துவிட்டால் அல்லது அடைந்தபோது எல்லோரும் அதிமனமாற்றமடைந்து விடுவார்கள் என்று அர்த்தமல்ல. மற்றவர்கள் அந்த மாற்றத்திற்கு ஆயத்தமாக இருந்தால், ஆயத்தமாக ஆகும்போது மாற்றமடைய முடியும், ஆனால், என்னுடைய வெற்றி அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே அதற்காக ஆர்வமுறுவது முற்றிலும் நியாயமானதே - அது கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது:

1. அதை அளவிற்கு மீறி சொந்த அல்லது அகங்கார விடயமாக்கிவிட்டால், அதிமனிதனாக வேண்டுமென்ற, நீட்சேவிற்கு இருந்தது போன்ற பேராவலாக ஆக்காவிட்டால்,

2. அந்த வெற்றிக்குத் தேவையான நிபந்தனைகளைப் பின்பற்றவும் படிகளைக் கடக்கவும் ஆயத்தமாக இருந்தால்,

3. ஒருவன் நேர்மையுடையவனாயிருந்து, அதை இறைவனைத் தேடுவதில் ஒரு பாகமாகவும், அதன் விளைவாக இறைவனின் சித்தம் அவனிடத்தில் வேலை செய்வதில் ஒரு பாகமாகவும் கருதினால் அந்தச் சித்தம் நிறைவேற வேண்டும், அது சைத்தியமாற்றமாகவோ, ஆன்மீக மாற்றமாகவோ, அதிமனமாற்றமாகவோ இருக்கலாம், அதைத் தவிர வேறு எதையும் வந்தடையக் கூடாது. அதை உலகில் இறைவனின் வேலை நிறைவேறுகவாதக் கருத வேண்டும், தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவோ அல்லது தன்னுடைய வெற்றியாகவோ கருதக் கூடாது.

(ஏப்ரல் 1935)

பின்குறிப்பு: ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடும் அதிமனம் என்ன என்பது குறித்து இதே பகுதியில் ஏற்கனவே அவருடைய வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது - ஆசிரியர்

வெப்துனியாவைப் படிக்கவும்