ரியல் ஹீரோ - சூர்யா!

புதன், 5 பிப்ரவரி 2014 (17:11 IST)
சென்னை, மெரினா கடற்கரையில், 7-7-13 மாலை ஒரு கொடுமையான சம்பவம். எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னாலும் படிக்கும் பிள்ளைகளின் காதுகளில் மட்டும் ஏறுவதே இல்லை.
FILE

கல்லூரி மாணவர்கள் மூன்று பேர், கடலில் இறங்கி தீவிரமாக குளித்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்தவர்கள், உற்சாக மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.

திடீரென்று காப்பாத்துங்க காப்பத்துங்க என்கிற குரல் கேட்க, அதையும் குஷியில் தமாஷாக கூச்சலிடுகின்றனர் என்றே புரிந்து கொண்டது கரையிலிருந்த கூட்டம். ஆனால், அங்கே சுக்கு காபி விற்றுக் கொண்டிருந்த சிறுவன் மட்டும் எதையோ உணர்ந்தவனாக சட்டென்று தன் கையிலிருந்த காபி கேனை கரையில் வைத்துவிட்டு, சிங்கமென சீறி தண்ணீருக்குள் பாய்ந்தான், அப்போதுதான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தது கரையிலிருந்த கூட்டம்.

தண்ணீரில் தத்தளித்தவர்கள் மூன்று பேருமே கிட்டத்தட்ட மயக்கமாகிவிட்ட நிலையில், ஒருவரை மட்டும் போராடி கரைக்கு இழுத்து வந்தான் அந்தச் சிறுவன். மீதமிருந்தவர்களை, கரையிலிருந்த படகைத் தள்ளிக் கொண்டு போய் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர் படகோட்டிகள் சிலர்.

சிறுவனால் காப்பற்றவர் உடனடியாக சுயநினைவு பெற்றுவிட, மற்ற இருவரும் சுயநினைவற்ற நிலையில், மூச்சுபேச்சற்ற நிலையில் காவலர்களின் துணையோடு ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர், உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தகவல். நான்காவதாக ஒருவர் தானே தப்பி கரையேறி வேகமாக அங்கிருந்து சென்றவிட்டதாகவும் தகவல்.

தன் உயிரை துச்சமென மதித்து, ஓர் உயிரைக் காப்பாற்றிய அந்த சுக்கு காபி சிறுவனின் பெயர் எஸ்.சூர்யா. லைட்ஹவுஸ் பகுதியிலிருக்கும் மாநகராட்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இப்படி காபி விற்பது வழக்கமாம். அவனுடைய துணிச்சலான செயலைக் கண்ட பலரும் அவனைப் பாராட்டித் தள்ளினர். அவன் கொண்டு வந்திருந்த சுக்கு காபியும் மளமளவென விற்றுத் தீர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்