வந்தாரை வரவேற்கும் பிரிட்டன்!
Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (19:48 IST)
புலம் பெயர்பவர்களையும், படிப்பு, தொழில் நிமித்தமாக வருபவர்களையும் மகிழ்வுடன் வரவேற்பதில் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனுக்கு 9-ஆவது இடம் கிடைத்துள்ளது.
குடியுரிமை விதிகள் தொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் புலம் பெயர்பவர்களுக்கு குடியுரிமை தருவதிலும், அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீண்டநாள் பிரிட்டனில் தங்க அனுமதிப்பதிலும் எளிதான கொள்கைகளை பிரிட்டன் பின்பற்றுகிறது என்று தெரியவந்துள்ளது.
இருந்தாலும் இந்த விசயத்தில் ஸ்வீடனுக்குத்தான் முதலிடம் கிடைத்துள்ளது. பிரிட்டன் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று டெய்லி மெயில் நாளிதழ் கூறியுள்ளது.
''போரினாலும் தீவிரவாதத்தினாலும் எழுந்துள்ள பயம், மிகப்பெரிய தனிப்பட்ட இனங்களைப் பிரதிபலிக்கும் மதவெளிப்பாடுகள், அடையாளம் சார்ந்த தனிப்பட்ட கேள்விகள் ஆகியவற்றுடன் இடம்பெயர்தல் என்பதும் ஐரோப்பாசந்திக்கும் முக்கியச் சிக்கலாக உள்ளது.
இந்நிலையில் இந்த வெளிப்படையாக கொள்கைகள் பரவலான விவாதத்தையும், மிகப்பெரிய புரிதலையும், வலிமையான செயல்பாட்டையும் தூண்டும் என்று நம்புகிறேன்'' என்று பிரிட்டிஷ் கவுன்சிலின் முதன்மைச் செயலர் மார்ட்டின் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால், புலம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதிலும், பணிபுரிவதிலும், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைவதிலும் கடுமையான விதிமுறைகளை பிரிட்டன் பின்பற்றுகிறது.
நார்வே, சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எவ்வளவு எளிது என்று ஆய்வுசெய்த பிறகுதான் இந்த முடிவிற்கு பிரிட்டிஷ் கவுன்சில் வந்துள்ளது.
இருந்தாலும், ஆண்டுதோரும் வருகின்ற புலம்பெயர்ந்தவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உள்துறைச் செயலர் டேவிட் டேவிஸ் கூறியுள்ளார்.
'' புலம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரிப்பதால் வீட்டுவசதி, பொதுத்தேவை வசதி ஆகியவற்றிற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்வதில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுகிறது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.