தமிழகத்தைச் சேர்ந்த 26 இளைஞர்கள் லிபியா நாட்டில் சிறைபிடிப்பு!
புதன், 6 பிப்ரவரி 2008 (18:38 IST)
தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக லிபியா நாட்டிற்குச்சென்ற 26 இளைஞர்களை வேலை தருவதாக கூறி அழைத்துச்சென்ற நிறுவனங்கள் கடந்த ஐந்து நாட்களாக சட்ட விரோதமாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மதுரை மாவட்டம் மேலுரைச் சேர்ந்த 13 பேர் உள்பட 26 இளைஞர்கள் லிபியா நாட்டில் 'டிரிபோலி' என்னும் இடத்தில் உள்ள 'அல் ஜலால்' என்னும் கட்டுமான நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி சம்பளம் வழங்கும்படி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்நிறுவனம் கடந்த ஐந்து நாட்களாக சட்ட விரோதமாக அவர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் உறவினர்களில் சிலர் அளித்துள்ள கடிதத்தை மேற்கோள் காட்டி மதுரை மாவட்ட அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களில் ஒருவரான துரைசாமி என்பவர் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதில் முறைகேடான சம்பளத்திற்காக வேலை செய்ய மறுத்த தொழிலாளர்களை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்துவதாகவும், அவர்களுக்கு சாப்பிட சரியான உணவு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்த கம்பெனியில் பல்வேறு வேலைகளுக்காக ரூ.25,000 சம்பளம் தருவதாக கூறி அந்த இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலூர் அருகே உள்ள வன்னபாறைபட்டியைச் சேர்ந்த கணேசன் என்ற ஏஜென்ட் அவர்களுக்கான வேலை, பயணம் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததாகவும் இதற்காக அவரிடம் தலா ரூ.85,000 கொடுத்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அங்கு சென்ற பிறகு தினமும் 20 மணி நேரம் வேலை பார்க்க சொல்வதாகவும், அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.8,000 மட்டுமே கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று மேலுரைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் 13 பேரின் உறவினர்களும் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் இதற்கான நகலை மாவட்ட நிர்வாகத்திடமும் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்