புதுடெல்லியில் நடந்துவரும் அயல்நாடுவாழ் இந்தியர்களின் 6 ஆம் ஆண்டு விழாவில் 43 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். விழாவின் ஒரு பகுதியாக 'இந்தியாவை தெரிந்துகொள்ளுங்கள்' என்ற நிகழச்சிக்காக அயல்நாடுவாழ் இந்தியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இதுகுறித்து கரீன் சிர்க்கி என்ற அயல்நாடுவாழ் இந்திய மாணவர் கூறுகையில், "இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினர் கூறித்தான் இநதியாவை பற்றி தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் இங்குள்ள கிராமங்களை நேரடியாக பார்த்தையும், மக்களுடன் பழகியதையும் சிறந்த அனுபவமாக கருதுகிறேன்" என்றார். "தென்இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். அதில் குறிப்பாக தமிழ்நாடு என்னை கவர்ந்தது. இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பதை உணர்ந்துள்ளேன்" என்று அனிஷ் தைலா கூறினார். "நான் 'சர்வதேச மேம்பாடு' படித்து வந்தாலும், இந்தியாவின் வளர்ச்சிக்காக பணி புரிவதையே விரும்புகிறேன்" என்கிறார் ரியா சேகல் என்ற மாணவி. இந்தியாவிற்கு திரும்ப வந்து, சமூக சேவை செய்ய உள்ளதாகவும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இளைய தலைமுறையினரின் ஆர்வத்தையடுத்து, "உலகின் அனைத்துபகுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழி மாணவர்களும் பயன்பெறும் வகையில், இந்தியாவில் பிரத்யேக பல்கலைக்கழகம் துவங்கப்படும்" என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இவ்வாறு இந்த மாநாடு நாட்டின் சமூதாய வளர்ச்சி, கிராமப்புற சுகாதாரம், கல்வி, முதலீடு, கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றில் அயல்நாடுவாழ் இந்தியர்களை ஐக்கியப்படுத்துவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.