சீக்கிய மாணவனுக்கு தெ.ஆ. பள்ளிகளில் சேர்க்கை மறுப்பு?

திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:40 IST)
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டு பள்ளிகளில் சீக்கிய மாணவனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீனா சிங் என்பவரது மகன் ஹர்கித்துக்கு துர்பன் உயர்நிலைப்பள்ளி, க்லேன்வுட் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சேர்க்கை மறுக்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய நாளிதழான 'சண்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் மதத்துடன் ஒன்றியதும், பாரம்பரியமிக்கதுமான 'டர்பன்' அணிந்திருந்ததால் தான் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பீனா சிங் அந்த நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "எனது மகனுக்கு இரண்டு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவன் உணர்ச்சி வசப்பட்டான். அவன் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன். இறுதியாக துர்பனில் உள்ள க்ராபோர்டு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த பள்ளியில் அவன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளான்" என்றார்.

'தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும; டர்பன் அணியக்கூடாது என்று வற்புறுத்தியதாகவும், அப்போதுதான் பள்ளியில் சேர்க்கை கிடைக்கும்' என்று கூறப்படுவதற்கு இரண்டு பள்ளிகளின் முதல்வர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
"இந்த புகார் முற்றிலும் தவறானது. அந்த மாணவனை இதுவரை பார்த்ததுகூட இல்லை" என்று துர்பன் உயர்நிலைப் பள்ளி முதல்வர் டேவிட் மேன்கர் கூறினார்.

இந்த சம்பவம் 'உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது'. அதிகாரிகள் விரைவில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள் என்று துர்பன் மாகாண கல்வித்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்