சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரிட்டனில் புதிய சட்டம்!
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (19:59 IST)
சட்டவிரோதமாக பிரிட்டனில் குடியேறும் தொழிலாளர்களுக்கு புதிய குடியேற்றச் சட்டப்படி, சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
புள்ளிகள் அடிப்படையிலான குடிபெயர்தல் முறை (Points-based immigration system) இன்று முதல் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் இந்த இரண்டையும் வரையறையின்றி உயர்த்திக்கொள்ள முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை சட்டவிரோதமாக குடியமர்த்தப்படுபவரின் நிறுவனத்திற்கு 5 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம் குறித்து பிரிட்டன் உள்துறை செயலர் ஜேக்கியூ சுமித் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளை சேர்ந்தவர்களின் குடியேற்ற விதிகளில் புதிய கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அயல்நாடுகளில் இருந்து வருபவர்களிடம் அடையாள அட்டை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.
பிரிட்டனில் பணிபுரிய விரும்பும் அதிக திறமைமிக்க இந்தியர்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறை பரிசோதிக்கப்படுகிறது. பிறகு, அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
அதனைதொடர்ந்து, பிரிட்டனில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள திறமையான தொழிலாளர்களுக்கும், திறமை குறைந்த தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும், தற்காலிக தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
புதிய சட்டப்படி, பிரிட்டனில் இந்திய, வங்கதேசத்தினர் நடத்தும் உணவு விடுதிகளுக்கு அப்பகுதியிலேயே தொழிலாளர்கள் கிடைப்பது கடினமானது என்பதால், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், இந்தியர்களின் உணவு விடுதிகள் மட்டும் பிரிட்டனில் 10 ஆயிரம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.