அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு சட்டம், மருத்துவம், நிதி ஆகியவற்றில் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக வாஷிங்டன், துபாய், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்த அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
துபாயில் மையம் அமைப்பதால் அரபு நாடுகளில் உள்ள அனைத்து இந்தியர்களும் பயன்பெற முடியும். அதேபோல், மலேசியா, சிங்கப்பூர், புருனே ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் கோலாலம்பூரிலும், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் வாஷிங்டன் மையத்தையும் அணுக முடியும் என்று அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக, அயல்நாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில், "அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் சுரண்டலுக்கு ஆளாகமல் தடுக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்ட ரீதியான ஆலோசனைகள், சேவைகள் தேவை. மனரீதியான ஆலோசனை, மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை பெண்களுக்கு அவசியம்.
அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு நிதி சேவையும் அவசியமாகிறது. பண பரிமாற்றம், சேமிப்பு, முதலீடு ஆகியவை குறித்த ஆலோசனை அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
அயல்நாடுவாழ் இந்தியர்களில் தவறான நபர்களை திருமணம் புரியும் பெண்களுக்கு சட்ட சேவை உட்பட பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு முதல் 230 புகார்கள் அமைச்சகத்திற்கு வந்துள்ளன.
எனவே சட்டம், நிதி, மருத்துவம் ஆகிய மூன்று சேவைகளையும் இந்திய தூதரங்கள் அளிக்க உள்ளது. முதல்கட்டமாக துபாய், கோலாலம்பூர் ஆகிய இந்திய தூதரகங்களில் 6 அதிகாரிகளும், வாஷிங்டனில் ஐந்து அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர்" என்றார்.