அயல்நாடு பணியாளர்களை காக்க புதிய விதிமுறைகள்!

ஐக்கிய அரபுக் குடியரசிற்கு அயல் நாடுகளில் இருந்து வந்து பணியாற்றிடும் பணியாளர்களின் உரிமைகளைக் காத்திடவும், அவர்களுடைய பணியிடம் மற்றும் வாழ்விடங்களில் உரிய வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும் புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு ஐக்கிய அரபுக் குடியரசு பிரதமரும், துபாய் இளவரசருமான ஷேக் மொஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்!

துபாய் சென்று பணியாற்றிடும் அயல்நாட்டு பணியாளர்கள், குறிப்பாக இந்தியப் பணியாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும், சங்கடங்களுக்கும் ஆளாக்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை அடுத்து ஷேக் மொஹம்மது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக துபாய் செய்தி நிறுவனமான வாம் கூறியுள்ளது.

"துபாய்க்கு வந்து பணியாற்றிடும் அயல்நாட்டு பணியாளர்களின் உடல் நலம், பாதுகாப்பு, கௌரவமான வாழ்க்கை, பணியிடத்திலும், வாழ்விடத்திலும் உரிய வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு" ஷேக் மொஹம்மது உத்தரவிட்டுள்ளார்.

அவர் அறிவித்துள்ள திட்டத்தின் படி, அயல்நாட்டு பணியாளர்களுக்கு உடல் நலத்தை காத்துக்கொள்ள மருத்துவக் காப்பீடும், மற்ற மருத்துவ வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும்.

ஒவ்வொரு பணியாளரும், வேலையை விட்டு விலகிய பிறகு அவர்களுக்குச் சேரவேண்டிய ஊதியத்தை 2 மாதங்களுக்குள் அளித்துவிட வேண்டும். அதேபோல, வேலையில் இருந்து விலகுவோர் 2 மாதங்களுக்கு முன்பாக அதனைத் தெரிவித்திட வேண்டும்.

பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், மனித உரிமை மீறல்களை கண்காணிக்க குழு அமைக்குமாறும் உத்தரவிட்டுள்ள ஷேக் மொஹம்மது, "அயல் நாட்டில் இருந்து பணியாற்றிட வருவோரை கௌரவக் குறைவாக நடத்தினாலோ, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தாலோ, அப்படிப்பட்ட நீதியற்ற நடத்தையை அரசு சகித்துக்கொள்ளாது" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்