அமெரிக்காவில் படிக்க 120 நாட்களுக்கு முன் விசா விண்ணப்பம்!

அமெரிக்காவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், அங்குள்ள கல்வி நிலையங்களில் என்றைக்கு பாடங்கள் துவக்கப்படுகிறதோ அதிலிருந்து 120 நாட்களுக்கு முன்னர் விசாவிற்காக விண்ணம் செய்யலாம் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது!

வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த இணைய உரையாடலில் கலந்துகொண்ட அமெரிக்காவிற்கு குடியேற்றம் அல்லாத பிரிவு விசா அளிப்புத் துறையின் தலைவர் சால்லி அயன்ஃபீல்ட் இத்தகவலை வெளியிட்டார்.

"அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் 120 நாட்களுக்கு முன்னர் விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த கல்வியாண்டிற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த 3 வாரங்களில் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நேர்காணல் நடத்தி முடிக்கப்படும்" என்று சால்லி கூறினார்.

2001 ஆம் செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதால் அமெரிக்கா சென்று படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அதனை மீண்டும் உயர்த்தும் வகையில் விசா விதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 18,000 இந்திய மாணாக்கர்களுக்கு விசா அளிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரிக்கும் என்று சால்லி கூறினார்.

அமெரிக்காவில் சென்று படிக்கும் அயல்நாட்டு மாணாக்கர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்