திருட்டை தடுக்க முயன்ற அமெரிக்காவாழ் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஜேயேஸ்குமார் பிராம்பாட் (52) ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ரோயநோக் பகுதிக்கு குடியேறினார். அவர் வெர்ஜீனியாவில் சொந்தமாக கடை நடத்திவந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இவரது கடைக்குள் புகுந்த திருட்டு கும்பல் அங்கிருந்த பொருட்களை திருடிச்செல்ல முயன்றது. தடுக்க முயன்ற பிராம்பாட்டை அந்த கும்பல் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றது.
புதியதாக கட்டப்பட்டுள்ள சொந்த வீட்டிற்கு தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அடுத்தவாரம் குடியேற திட்டமிருந்த நிலையில், பிராம்பாட் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர் அசித் இனாம்தர் கூறுகையில், "கடுமையாக உழைத்து தனது வாழ்க்கையை உயர்த்திக்கொண்டார். தற்போது, அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது' என்று வருத்தம் தெரிவித்தார்.
பிராம்பாட்டின் கடையில் பணிபுரியும் அடுல் பட்டேல் கூறுகையில், "கடையில் முழு பாதுகாப்பு கருவிகள், காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால் சம்பவத்தின்போது, பணியாட்கள் தங்களது பாதுகாப்பில் கவனம் செலுத்தினர்" என்றார்.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக கெல்வின் பாண்ட் வாட்சன் (51) என்பவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பேரை தேடி வருகின்றனர்.