அமெரிக்காவில் பணியாற்றிவரும் அயல்நாடு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் என்.ஆர்.ஐ. மையம் திறக்கப்படும் என்று அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்!
வாஷிங்டன் வந்துள்ள அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி, ஓர் முன்மாதிரி திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள என்.ஆர்.ஐ. மையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.
அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டு வாழ்ந்து வரும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இம்மையத்திற்கு வந்து தூதரக அதிகாரிகளையும், அவசியம் ஏற்பட்டால் தூதரையும் சந்தித்துக் கூறலாம் என்று கூறினார்.
இதுவரை அயல்நாடுகளில் அந்நாடுகளின் குடியயுரிமை பெற்று வாழ்ந்து வரும் 6,000க்கும் அதிகமான இந்தியர்களுக்கு வம்சா வழி இந்தியர் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன்மூலம் அவர்கள் அந்நாட்டின் குடிமக்களாக இருந்துகொண்டே இந்திய குடிமக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் பெறலாம் என்று கூறினார்.
வம்சா வழி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பி.ஐ.ஓ. அட்டைகளைப் போல, அயல்நாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்து செல்வதற்கு உள்ள விசா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க ஓ.சி.ஐ. என்றழைக்கப்படும் அயல்நாட்டில் வாழும் இந்திய குடிமகன் அட்டையை வழங்குவது வேகப்படுத்தப்படும் என்று கூறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றிக் கொண்டு வாழ்ந்து வரும் 2.5 கோடி அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து சட்ட முன்வரைவை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் வயலார் ரவி கூறினார்.
அப்படிப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டால் அயல்நாடு வாழ் இந்தியரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் என்றும், தேர்தல் நடைபெறும் பொழுது அவர் இந்தியாவில் இருந்தால் வாக்குரிமை பெறுவார் என்றும் அமைச்சர் ரவி விளக்கினார்.
அயல்நாடுகளில் குடியுரிமை பெறுவதற்காக போலித் திருமணங்கள் செய்துகொள்வது அதிகரித்து வருவது குறித்து கேட்டதற்கு, அவசரப்பட்டு திருமண உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அயல்நாடு வாழ் இந்தியர்களை கேட்டுக் கொள்வதாகவும், அது குறித்து ஒரு விழிப்புணர்வு திட்டத்தை விரைவில் துவங்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கூறினார்.
இரண்டு வார பயணமாக அமெரிக்கா வந்துள்ள அமைச்சர் வயலார் ரவி, லாஸ் ஏஞ்சலஸ், சான் ஃபிரான்சிஸ்கோ, அட்லாண்டா, ஆர்லாண்டோ, வாஷிங்டன் டி.சி., நியூயார்க், சிகாகோ நகரங்களுக்கு செல்லவுள்ளார்.