"நம் நாட்டிற்கே உரித்தான பண்பாட்டுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரம் வேண்டும்"
- அயல் நாடு வாழ் இந்தியர்கள் ஆசை!
சனி, 15 டிசம்பர் 2007 (18:15 IST)
கல்வி, அதிக சம்பளம், உயர்ந்த வாழ்க்கைத்தரம் போன்ற காரணங்களுக்காக பெரும்பாலும் இந்தியர்கள் அயல்நாடுகளுக்கு இடம் பெயருகின்றனர். ஆனால் அந்த ஒவ்வொருவரும் இயற்கை அமைத்துக்கொடுத்த சொந்த உறவுகளுடன் வாழ்ந்த நாட்களை பொக்கிஷங்களாக மனதில் பாதுகாத்து அவ்வப்போது நினைவு கூறுகிறார்கள்.
அந்த சுகமான தருணங்கள் ஒவ்வொருக்கும் வேறுபட்டிருந்தாலும், அவை அவர்களுக்கு மட்டுமே சொந்தம். எனினும் அந்த நினைவுகளோடு மட்டுமே வாழ்ந்துவிட விரும்பவில்லை.
போதிய பொருளாதர வசதியை பெற்றபிறகு, மீண்டும் அந்த சுகத்தை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கவே விரும்புகிறார்கள். அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கைக்கு அடிமையாவது இல்லை என்பதைத்தான்அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
என்ஆர்ஐ ஆன்லைன் டாட் காம் என்ற இணையதளம் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் அளித்துள்ள பதில் இந்தியாவின் அவலங்களையும் அலசியுள்ளது.
புதுவிதமான வாழ்க்கைச்சூழலில் தெருக்கள் முதல் மேகத்தை தொடும் கட்டிடங்கள், உணவு, உடை, பழக்க வழக்கங்கள் மாறுபட்ட நிலையில், அயல்நாடு வாழ் இந்தியர்கள் ஏங்குவதுதற்கும், மகிழ்வதற்கும் பல சந்தர்ப்பங்கள் உண்டு.
நீங்கள் இழந்தது என்ன? என்ற கேள்விக்கு இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு என்று பலரும் பதில் அளித்துள்ளனர்.
சாதியின் அடிப்படையில் சலுகைகள் வழங்கக்கூடாது, தலை விரித்தாடும் லஞ்சத்தை அறவே ஒழிக்க வேண்டும், இலவச அடிப்படைக் கல்வி, முதியவர்களுக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்துகின்றனர்.
பெரும்பாலான நாடுகளில் எதிர்பார்த்த வருமானம், திட்டமிட்ட வாழ்க்கை, ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஆகியற்றில் விஞ்சிநிற்பதை விரும்பும் அவர்கள் வறுமை, லஞ்சம், அடிப்படை வசதிக் குறைபாடு, எய்ட்ஸ், தீவிரவாதம், குழப்பத்திலேயே காலத்தை கழிக்கும் மனிதர்கள், ஏழைகளுக்கு கல்வி கிடைக்காத நிலை, கல்வியறிவின்மை போன்ற அவலங்கள்தான் சொந்தநாட்டின் முக்கிய பிரச்சனையாக தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் கொட்டிகிடக்கும் இயற்கை வளங்கள், திறமையான இளைஞர்கள், மனிதசக்தி, பண்பாடு ஆகியவற்றை இந்தியாவின் வலிமையாக கருதுகின்றனர். இந்திய பாரம்பரியமிக்க உணவுகளையே அனைவரும் விரும்புகின்றனர்.
நம்நாட்டிற்கே உரித்தான அதே கலாச்சார, பண்பாட்டுடன் வளர்ந்த நாடுகளை போன்ற வாழ்க்கைத்தரத்தை சொந்த நாடும் பெறவேண்டும் என்ற அயல்நாடுவாழ் இந்தியர்களின் ஆசை ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு...
அந்தநிலையை நோக்கித்தானா நம் நாடு செல்கிறது?