மிசிசிபியில் உள்ள சிக்னல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணியாற்றும் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், இது தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு அமெரிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த வாரம் எச்2பி விசா முறையை கைவிடக்கோரி, 100 அமெரிக்கவாழ் இந்திய தொழிலாளர்களும் நியூ ஆர்லன்சிலிருந்து வாஷிங்டன் வரையில் 1,500 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
"இந்த நவீனகால அடிமை முறையை கைவிடக்கோரி நாங்கள் வாஷிங்டன் வரை 'சத்யாகிரகம்' மேற்கொண்டோம்" என்று சிக்னல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சாபுலால் விஜயன் தெரிவித்தார்.
"தொந்தரவுகளை தாங்கும் அளவுக்கு போதிய மன பலத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம். அமெரிக்க அரசின் எச்2பி தொழிலாளர்கள் விசா முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், எங்களை போன்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார் அவர்.
மேலும், இத்தொழிலாளர்களின் கோரிக்கையைக் கேட்ட அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனன் சென் "இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்களின் கண்ணியத்தை காக்கவும் இந்திய அரசும், தூதரகமும் கூடுதல் கவனம் செலுத்தும்" என்று உறுதியளித்துள்ளார்.