வளைகுடாவில் பணியாற்றிய 269 இந்தியர்கள் தற்கொலை

கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் பணியாற்றச் சென்ற 269 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்தது!

மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது இந்திய அயலுறவுத் துறை இணை அமைச்சர் இ. அஹமது எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தோஹா, அபு தாபி, பஹ்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு துவங்கி இன்றைய தேதி வரை மட்டும் 166 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், தனிப்பட்ட பிரச்சினை, நிதி, குடும்ப சூழல் மற்றும் பணிப் பளு உட்பட பல காரணங்களுக்காக இந்த தற்கொலைகள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தற்கொலை செய்த கொண்ட 269 பேரில் சௌதி அரேபியா நாட்டில் மட்டும் 69 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டு 37 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கடுத்தபடியாக ஓமன் நாட்டின் கடந்த ஆண்டு 44 பேரும், இந்த ஆண்டு இதுவரை 23 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற தற்கொலைகள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இந்தியர்களை பாதுகாக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைகள் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பல்வேறு சமூக, கலை நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும். மேலும், சில அமைப்புகள் திறந்த இல்லம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்புடன் தொடர்பு கொண்டு இந்தியர்கள் யாரும் தங்களது அனைத்து பிரச்சினைகளையும் விவாதித்து தீர்வு காணலாம் என்று அஹமது கூறினார்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்தியர்களை பணிக்கு அனுப்பும் முகமை நிறுவனங்கள், பணி நியமன சான்றிதழ், தேவைக் கடிதம், பணி ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு, வீடுகளுக்கு பணியாற்ற அனுப்பப்படும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்